கண்டித்த சரத் பவார்… சரண்டரான காங்கிரஸ்… முடிவுக்கு வந்த சாவர்க்கர் விவகாரம்!

கண்டித்த சரத் பவார்… சரண்டரான காங்கிரஸ்… முடிவுக்கு வந்த சாவர்க்கர் விவகாரம்!

Share it if you like it

சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு சரத் பவாரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இனி சாவர்க்கரை பற்றிய விமர்சனத்தை தவிர்க்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மோடி சமூகம் பற்றி அவதூறாகப் பேசிய வழக்கில் குற்றவாளியான ராகுல் காந்தி, மன்னிப்புக் கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல, எனது பெயர் ராகுல் காந்தி என்று கூறியிருந்தார். சாவர்க்கர் குறித்த இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக, சாவர்க்கர் பிறந்த மாநிலமான மகாராஷ்டிரா மக்கள் ராகுலுக்கு எதிராக கொந்தளித்தனர். அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சாவர்க்கரை தொடர்ந்து இழிவுபடுத்தி வந்தார், ராகுல் காந்தி பொதுவெளியில் நடமாட முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதேபோல, கூட்டணிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவோ, சாவர்க்கர் எங்களுக்கு கடவுளை போன்றவர். அவரை இழிவுபடுத்துவதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி, ராகுலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், அதே கட்சியின் மற்றொரு தலைவரான சஞ்சய் ராவத்தும், ராகுல் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தவிர, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், ராகுல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு, சாவர்க்கர் குறித்து பேச வேண்டாம் என்று கண்டிப்புக் காட்டி இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று மாலை எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, இந்த விவகாரத்தை எழுப்பிய சரத் பவார், மகாராஷ்டிராவில் மரியாதைக்குரிய நபரான சாவர்க்கரை குறிவைப்பது மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு உதவாது. அதோடு, சாவர்க்கர் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்ததில்லை. ஆகவே, எதிர்க்கட்சிகளின் உண்மையான போராட்டம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வை நோக்கிதான் இருக்கவேண்டுமே தவிர, சாவர்க்கரை நோக்கி அல்ல என்று ராகுல் காந்தியிடம் எடுத்துக் கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, சாவர்க்கர் மீதான விமர்சனத்தை தவிர்க்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.


Share it if you like it