கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் அதிக அளவில் மழைப்பொழிவு பதிவாகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து தேங்குவதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், நாகர்கோவில் வடசேரி பகுதியில் தனது வீட்டுக்குள் புகுந்த மழை நீரை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வடசேரி அடுதத ராஜபாதை பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர், தனது வீட்டு அருகே உள்ள ஓடையை ஒருவர் மூடியதால், அவர் வாழும் பகுதி முழுவதும் மழை நீர் தேங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் தன்னுடைய வீடும் ஒன்று என்றும், தான் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு அவதிப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
வடிகால் ஓடையை அடைத்து வைத்து உள்ளதாகவும், இதனால் ஓடை வழியாகச் செல்லும் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து தனது வீட்டின் பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் பாய்ந்து ஓடுவதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அவரும், அவரது தாயாரும் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வருவதாகவும், விபத்து ஒன்றில் கால் முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறி, அவர் கூச்சலிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக, அப்பெண் வெளியிட்டிருந்த வீடியோவில், காப்பாத்துங்க ஐயா.. காப்பாத்துங்க சிஎம் ஐயா.. என கூச்சலிட்டு, அவரது வீட்டின் நிலை குறித்து பல்வேறு பகுதிகளில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தற்போது இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூச்சலிட்டபடி கூறி இருந்தார்.