விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மருந்து மாத்திரை கூட இல்லாத அவலநிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பதால், ஆத்திரமடைந்த சாமானியன் ஒருவர், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி, மணப்பெண் வீட்டார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணன் கோயிலுக்கு நேற்று 3 வேன்களில் புறப்பட்டுச் சென்றனர். சங்கரன்கோவில் அருகே ஒரு வளைவில் திரும்பியபோது, 3 வேன்களில் ஒரு வேன் டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம் செய்து பலரும் காயமடைந்தனர்.
இதையடுத்து, காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள பெரியகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். ஆனால், அங்கு விபத்துக்கான மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இல்லை. ஆகவே, வெறுமனே காட்டன் துணியை மட்டும் வைத்து கட்டிவிட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லும்படி கூறியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண் வீட்டைச் சேர்ந்த ஒருவர், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை வெளுத்து வாங்கி விட்டார்.
“சென்னையிலுள்ள ஆஸ்பத்திரிகள் மட்டும் தரமாகவும், தட்டுப்பாடின்றி மருந்து, மாத்திரைகளும் கிடைத்து விட்டால் போதுமா. தென் மாவட்டங்கள் எல்லாம் தமிழகத்தில் இல்லையா? அரசு மருத்துவமனையில் அவசரத்திற்குக் கூட ஊசி, மருந்து மாத்திரைகள் இல்லை. இதெல்லாம் மருத்துவமனையா? நானும் தி.மு.க.காரன்தான். ஆனால், இந்த ஆட்சி எனக்குப் பிடிக்கவில்லை” என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்து விட்டு பலரும், தி.மு.க. பிரமுகர் ஒருவரே தி.மு.க. ஆட்சி பிடிக்கவில்லை என்று சொல்கிறார் என்றால், இந்த ஆட்சியின் அவலத்தை என்னவென்று சொல்வது என்று அங்கலாய்த்து வருகின்றனர்.