ராஜஸ்தானில் கவிழ்கிறது காங்கிரஸ் ஆட்சி?!

ராஜஸ்தானில் கவிழ்கிறது காங்கிரஸ் ஆட்சி?!

Share it if you like it

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், மூத்த தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருவதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கவிழ வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் இருந்து வருகிறார். அசோக் கெலாட் முதல்வராகப் பதவியேற்றதில் இருந்தே, மூத்த தலைவர் சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த சூழலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறு. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும். காரணம், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்பது கொள்கை முடிவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, மூத்த தலைவர் சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அசோக் கெலாட் தலைவரானாலும், முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அப்படி விட்டுக் கொடுத்தாலும், அது தனது ஆதரவாளருக்குத்தான் போய்ச்சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இந்த நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக, ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இக்கூட்டத்திற்கு முன்பாகவே, அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கூட்டம், அமைச்சர் சாந்தி தாரிவால் தலைமையில் தனியாக நடந்தது. இக்கூட்டத்தில், சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயன்றார். ஆகவே, பைலட்டுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று பலரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், அசோக் கெலாட்டே முதல்வர் பதவியில் தொடர்வது கட்சிக்கு வலு சேர்க்கும் அல்லது அவரது ஆதரவாளருக்கு அந்த பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதையும் மீறி சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டால், அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 90 பேரும் ராஜினாமா செய்வது எனவும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் பிறகு, ஜெய்ப்பூரிலுள்ள முதல்வர் அசோக் கெலாட் வீட்டில் நேற்று இரவு 10 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் துவங்கியது. மேலிட பார்வையாளர்களாக மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மாக்கன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சச்சின் பைலட்டை முதல்வராக தேர்வு செய்வதாக மேலிட பார்வையாளர்கள் முன்மொழிந்ததாகத் தெரிகிறது. ஆனால், இதனை ஏற்க மறுத்துவிட்ட அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 92 பேர், கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டனர். மேலும், ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்கிற காங்கிரஸ் தலைமையின் கொள்கை முடிவிலிருந்து அசோக் கெலாட்டுக்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினர். இதற்கு மேலிட பார்வையாளர்கள் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, 92 பேரும் தங்களது ராஜினாமா கடிதத்துடன் சென்று சபாநாயகரை சந்தித்தனர். இதனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.


Share it if you like it