காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்ததற்காக 46 வயது பழங்குடியின வாலிபரை அடித்துக் கொலை செய்த முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த நசீர், பப்லு, ஷகீல் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 10 பேரை தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் சூர்சாகர் அருகேயுள்ள போமியாஜி கி காதி கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷன்லால் பீல். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த 7-ம் தேதி இரவு ஊருக்கு மத்தியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர், கிஷன்லாலை தள்ளி விட்டு, ஜாதியைச் சொல்லி திட்டி விரட்டி இருக்கிறார்கள். இதனால், கிஷன்லால் பீல் வீடு திரும்பி விட்டார். இதன் பிறகு, சுமார் 10 முதல் 15 பேர் சேர்ந்து கிஷன்லால் வீட்டுக்கு வந்து, எப்படி தங்கள் பகுதியிலுள்ள ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் பிடிக்கலாம் என்று சொல்லி, அவரையும், அவரது மகனையும் சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும், அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால், மேற்படி கும்பல் தடுத்துவிட்டது. இதனால், உயிருக்குப் போராடிய நிலையில், மயங்கிச் சரிந்திருக்கிறார் கிஷன்லால். இதனிடையே, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்து கிஷன்லாலை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், அதற்குள் கிஷன்லால் இறந்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் குற்றவாளிகளை கைது செய்தால்தான், உடலை வாங்குவோம் என்றும், 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஷகீல், நசீர், பப்லு ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது பட்டியல் ஜாதி மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 கொலை ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 10 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக சூர்சாகர் காவல் நிலைய அதிகாரி கவுதம் தோடசரா தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து கிஷன்லாலின் சகோதரர் அருண் குமார் கூறுகையில், ஊருக்கு நடுவிலுள்ள ஆழ்குழாய் கிணறு அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், இஸ்லாமியர்கள் அதை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, மற்றவர்களை தண்ணீர் பிடிக்க விடுவதில்லை. சம்பவத்தன்று கிஷன்லால் தண்ணீர் பிடிக்கச் சென்றதால், எங்களது வீட்டை தாக்கி, கிஷன்லாலையும், அவரது மகனையும் இரும்பு கம்பிகள் மற்றும் கட்டைகளால் தாக்கினர்” என்று கூறியிருக்கிறார்.
அடிபைப்பில் தண்ணீர் பிடித்ததற்காக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.