ராஜஸ்தானில் ஹிந்து டெய்லர் கன்ஹையா லாலை கொலை செய்தவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் டெய்லர் கடை நடத்தி வந்தவர் கன்ஹையா லால். இவர், இஸ்லாம் மதப் புத்தகத்தில் முகமது நபி குறித்து இடம்பெற்றிருந்த கருத்து பற்றி பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுர் ஷர்மா பேசியதற்கு ஆதரவாக வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். இதற்காக கைது செய்யப்பட்ட இவர், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது, கன்ஹையா லாலுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது. எனவே, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தவர், தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை போலீஸ் கண்டுகொள்ளவே இல்லை.
இந்த நிலையில்தான், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர் நேற்று முன்தினம் காலை கன்ஹையாவின் டெய்லர் கடைக்குச் சென்று துணி தைக்க வந்திருப்பதுபோல நடித்து, அவரை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். மேலும், இந்த காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதோடு, மற்றொரு வீடியோவில் இதேபோல பிரதமர் மோடியையும் கொலை செய்வோம் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், ஹிந்துக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.
இதனிடையே, பயங்கரவாதிகள் இருவரையும் ராஜஸ்தான் போலீஸ் கைது செய்திருக்கிறது. எனினும், இந்த விவகாரத்தில் ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பின் (என்.ஐ.ஏ.) தனிப்படை உதய்பூர் விரைந்தது. இந்த விசாரணையில்தான் கன்ஹையா லால் கொலையாளிகளில் ஒருவன், பாகிஸ்தானில் செயல்படும் தவாத் இ இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்திருக்கிறது. மேலும், இவன் 2014-ம் ஆண்டு கராச்சியில் உள்ள அந்த இயக்கத்தின் தலைமையகத்துக்கு சென்று வந்ததும், சுமார் 45 அங்கு தங்கி ஆயுத பயிற்சி எடுத்ததும் அம்பலமாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.