6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசுத் தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதை காங்கிரஸ் கட்சி வரவேற்றிருக்கிறது.
1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர், நளினியின் மரண தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்து கவர்னர் உத்தரவிட்டார்.
கடந்த 2014-ம் ஆண்டில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையையும் ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. இதையடுத்து, கடந்த மே மாதம் 18-ம் தேதி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது ஷரத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து, நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில்தான், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மறுசீராய்வு மனுவை, மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் குமார் சர்மா தாக்கல் செய்திருக்கிறார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி வரவேற்றிருக்கிறது. இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், “ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மறுசீராய்வு மனுவை வரவேற்கிறோம். எனினும், விடுதலை நடவடிக்கையை மத்திய அரசு முன்கூட்டியே தடுத்திருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.