‘குற்றவாளிகளை கொண்டாடாதீங்க’: 6 பேர் விடுதலை; கார்த்தி சிதம்பரம் கடுப்பு!

‘குற்றவாளிகளை கொண்டாடாதீங்க’: 6 பேர் விடுதலை; கார்த்தி சிதம்பரம் கடுப்பு!

Share it if you like it

ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 6 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கொண்டாட வேண்டாம் என்று கார்த்தி சிதம்பரம் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

1991-ம் ஆண்டு தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்துக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிவராசன், தணு ஆகியோர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இவரது கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்த இவர்களை, தங்களது அரசியல் லாபத்துக்காக விடுவிக்க வேண்டும் என்று தி.மு.க., நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். மேலும், இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால், இது தொடர்பாக கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, பேரறிவாளனை மட்டும் கடந்தாண்டு பரோலில் விடுவித்த தி.மு.க. அரசு, அவரது விடுதலைக்காக உச்ச நீதிமன்றத்தை நாடியது. அதன்படி, கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டார். அப்போது, தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், சீமான், திருமாவளவன் உள்ளிட்ட பலரும் அவர் ஏதோ விடுதலை போரில் ஈடுபட்ட போராளிபோல கொண்டாடித் தீர்த்தனர். அதேசமயம், காங்கிரஸ் கட்சியினரும், பா.ஜ.க.வினரும் இதற்கு கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சிறை தண்டனை முடிந்து கோர்ட் அவர்களை விடுதலை செய்தால் செய்யட்டும். அதற்காக, குற்றவாளிகளை கொண்டாடாதீர்கள் என்று கடுமையாகப் பேசி இருந்தார். மேலும், குற்றவாளிகளின் விடுதலையைக் கொண்டாடும் இவர்கள், உயிரழந்தவர்களின் குடும்பத்தை எண்ணிப் பார்த்தார்களா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில்தான், பேரறிவாளன் விடுதலையை சுட்டிக்காட்டி, முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட மேலும் 6 பேரையும் விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, 6 பேர் விடுதலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது தவறான முடிவு; முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல, இந்த முறையும் கார்த்தி சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சிறை தண்டனை முடிந்த குற்றவாளிகளை கோர்ட் விடுவித்தால் விடுவித்து விட்டுப் போகட்டும். அதற்காக குற்றவாளிகளை கொண்டாடாதீர்கள் என்று தான் ஏற்கெனவே கூறியதையே மீண்டும் கூறியிருக்கிறார்.

எனினும், கார்த்தி சிதம்பரத்தின் இந்த கருத்து செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கும். காரணம், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டபோது, கொண்டாடியதைப் போலவே தற்போதும் தி.மு.க.வினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும், தமிழ் தேசிய போராளிகளும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஆகவே, சிறையிலிருந்து விடுதலையானவுடன் அக்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆசிபெறுவார்கள். அவர்களுக்கு தலைவர்களின் வீடுகளில் விருந்து பரிமாறப்படும். கட்டிப்பிடி வைத்தியம் நடக்கும். சத்தியராஜ் போன்ற நடிகர்கள் குற்றவாளிகளுடன் சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று குதூகலிப்பார்கள் என்று வேதனை தெரிவிக்கிறார்கள் தேசியவாதிகளும், ராஜிவ் காந்தியின் விசுவாசிகளும். எல்லாம் காலத்தின் கோலம்…


Share it if you like it