தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மதமாற்றம் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வந்தது. அதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு சோதனை நடத்தி தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள முகமது அலி ஜின்னா, அப்துல் மஜீத், குல்காத்தின், சாகுல் அமித், நபீர் ராஷித், ஆகிய ஐந்து பேரை தேடப்படும் குற்றவாளிகள் என அறிவித்து இவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில், தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் அடிப்படையாக கொண்டு இன்று காலை முதல் தமிழகத்தின் தஞ்சை, கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனை முடிவில் என்ன மாதிரியான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை குறித்து முழுமையான தகவல் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.