பள்ளியில் படிக்கும் ஹிந்து மாணவர்கள், தங்களுடன் படிக்கும் இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு ரம்ஜான் விருந்து கொடுத்து அசத்தி இருக்கிறார்கள். எங்கு தெரியுமா? மத வெறியைத் தூண்டுவதாகக் கூறப்படும் பா.ஜ.க.வைச் சேர்ந்த பாரத பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில்தான்.
குஜராத் மாநிலம் சூரத்தில் அமைந்திருக்கிறது அரசு தொடக்கப் பள்ளி. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மத வேறுபாடின்றி பழகி வருகின்றனர். இதனால், புனித ரமலான் மாதத்தில் ஹிந்து மாணவர்கள் பணம் வசூலித்து இஸ்லாமிய மாணவர்களுக்கு இப்தார் விருந்து வைத்து வருகின்றனர். அதேபோல, தீபாவளி பண்டிகையின்போது இஸ்லாமிய மாணவர்கள் பணம் வசூலித்து ஹிந்து மாணவர்களுக்கு பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நிகழாண்டு புனித ரமலான் மாதம் தொடங்கி நடந்துவருகிறது. எனவே, ஹிந்து மாணவர்கள் தங்களுக்குள் பணத்தை திரட்டி, இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு இப்தார் எனப்படும் விருந்து கொடுத்து உபசரித்திருக்கிறார்கள். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு, வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அப்பள்ளியின் ஆசிரியர் ஷா முகமது ஷஹீத் இஸ்மாயில் கூறுகையில், “இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் மத வேறுபாடின்றி பழகி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இரு தரப்பு பண்டிகைகளின் போதும் மாணவர்கள் தங்களுக்குள் விருந்து படைத்து மகிழ்கிறார்கள். இதற்காக தங்களது பெற்றோர் கொடுக்கும் பாக்கெட் மணியில் சிறிது பணத்தை சேமித்து வருகிறார்கள். மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்கும் முதல் இடம் பள்ளிதான். ஆகவே, கல்வியுடன் பல்வேறு கலாசாரங்களையும் பள்ளியில் கற்பிப்பது அவசியம்” என்றார்.
பல்வேறு மாநிலங்களில் ஹிந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த மோதல் அதிகமாக இருக்கிறது. நிகழாண்டு ராம நவமி ஊர்வலத்தின்போது கூட இம்மாநிலங்களில் மோதல்கள் வெடித்தது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கல்வீச்சு நிகழ்ந்து, அரை டஜன் பேர் காயமடைந்தனர். இந்த சூழலில் மத நல்லிணத்தை வளர்க்கும் வகையில், இப்படியொரு நிகழ்ச்சி குஜராத்திலுள்ள பள்ளியில் கடைப்பிடிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதேபோல, அனைத்து மாநிலங்களிலும் நடந்தால் மத மோதல்கள் இன்றி மக்கள் நிம்மதியாக வாழ வழிவகுக்கும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பும்.