ராணிப்பேட்டையில் கஞ்சா விற்பனையை தடுக்க முயன்ற போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை சக்கைப்போடு போடுகிறது. இதனால், இளைஞர்களும், மாணவர்களும் சீரழிகின்றனர். இதுகுறித்து போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அரக்கோணம் போலீஸார் கஞ்சா கும்பலை சல்லடை போட்டு தேடி வந்தனர். அந்த வகையில், அரக்கோணம் திருமலை ஆச்சாரி தெருவில் ரியாஸ் அகமது என்பவர் 100-க்கும் மேற்பட்டோரை வைத்து கஞ்சா வியாபாரம் செய்துவருவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அரக்கோணம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ. கணேசன் மற்றும் போலீஸார் சந்தோஷ், ஏழுமலை ஆகியோர் நேற்று மதியம் அப்பகுதிக்குச் சென்றனர்.
ரியாஸ் அகமதுவின் வீடு தெரியாததால், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசூரியா என்ற வாலிபரை அழைத்துக் கொண்டு ரியாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்திருக்கிறார்கள். அப்போது, அங்கிருந்த 17 வயது சிறுவன் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டான். இந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் போலீஸ்காரர்கள் ஏழுமலை, சந்தோஷ் மற்றும் ஜெயசூரியா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, உடன் வந்த மற்ற போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இதுகுறித்து, வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதன் பிறகு, போலீஸாரின் தீவிர சோதனையில் கஞ்சா வியாபாரி ரியாஸ் அகமது கைது செய்யப்பட்டார்.