வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பயணிகளின் நலன் கருதி மினி பேருந்து சேவை வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சமீபத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
ஆனால், இந்த பேருந்து நிலையத்துக்கு நேரடியாக ரயில் நிலைய வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், ரயிலில் பயணம் மேற்கொள்ள பொதுமக்கள் அவதி அடைகின்றனர். அருகில் உள்ள மறைமலை நகர், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் போன்ற ரயில் நிலையங்களில் இருந்து சென்னைக்குள் செல்ல வேண்டியுள்ளது.
ஆனால், சிலர் இது தெரியாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்துவிடுகின்றனர். அங்கிருந்து ரயிலிலும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் பயணம் செய்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியூரில் இருந்து வந்த கட்டணத்தைவிட ஆட்டோவுக்கு அதிக கட்டணம் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதனால், கிளாம்பாக்கத்துக்கு அருகில் உள்ள ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு மினி பேருந்து சேவை வசதியை மாநகரப் போக்குவரத்து கழகம் ஏற்படுத்த வேண்டும். கிளாம்பாக்கம் தொடங்கியது முதல் வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக மினி பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.