ஹெலிகாப்டர் மூலம் கர்ப்பிணி பெண் மற்றும் 1.5 வயது குழந்தை உட்பட 4 பயணிகள் மீட்பு !

ஹெலிகாப்டர் மூலம் கர்ப்பிணி பெண் மற்றும் 1.5 வயது குழந்தை உட்பட 4 பயணிகள் மீட்பு !

Share it if you like it

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகளுக்கு உணவு வழங்குவதற்காக மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களாக ரெட் அலர்ட் நீடிக்கிறது. இந்த கனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால், ரயில் பாதைகள் தண்ணீரில் மூழ்கியிருக்கின்றன.

ஸ்ரீ வைகுண்டம் – செய்துங்கநல்லூர் ரயில் பாதையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அந்த ரயிலில் 800 பயணிகள் இருந்தனர். இவர்களில் நேற்று 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள், 2 வேன்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள பள்ளியில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டனர்.

ரயிலில் சிக்கியுள்ள மீதமுள்ள 500 பயணிகளுக்குச் சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாத காரணத்தால், ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகத் தேவையான 2 டன் உணவு மற்றும் தண்ணீர் பொருள்களுடன் ஹெலிகாப்டர் கோயம்புத்தூர் சூலூரிலிருந்து புறப்பட்டு வானிலை சரி இல்லாத காரணத்தால் வழங்கப்படாத நிலையில் நேற்றிரவு மதுரை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது.

இந்நிலையில் நிவாரண பொருட்களுடன் ஹெலிகாப்டர் இன்று காலை 7 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. முதலில் இந்த ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மேலும் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை தொடர்ச்சியாக மதுரை விமான நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்று மக்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது ரயில் நிலையத்தில் சிக்கிய 1.5 வயதுடைய குழந்தை, கர்ப்பிணி உட்பட 4 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதுதொடர்பான காட்சிகள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Share it if you like it