மத்திய அரசின் சார்பில் ‘லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையை அடுத்த மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் வகையில், ‘மை பாரத்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், தேசிய அளவில் 30 லட்சம் மாணவர்கள் இணைந்துள்ளனர். முதல்கட்டமாக ஒரு கோடி பேரை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். நமது நாடு 2014-ம் ஆண்டுக்கு பிறகு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அகில இந்திய மருத்துவ கல்லூரிகளின் (எய்ம்ஸ்) எண்ணிக்கை 7-லிருந்து 22 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 362-லிருந்து 700 ஆக அதிகரித்திருக்கிறது. ஸ்டார்ட்-அப் எனப்படும் புத்தாக்க தொழில் நிறுவனங்கள் 500-க்கும் மேல் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியா உலக அளவில் 3-வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பொருட்கள் உற்பத்தி செய்வது அதிகரித்து இறக்குமதி குறைந்துள்ளது. உலக அளவில் நிகழும் மின்னணு பணபரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில்தான் நிகழ்கின்றன. தற்போது 5-வது பெரிய பொருளாதார நாடாக திகழும் இந்தியா விரைவில் 3-வது இடத்துக்கு முன்னேறும். பொருளாதார உள்கட்டமைப்பில் மட்டுமல்லாமல் சமூக உள்கட்டமைப்பிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த இரு உள்கட்டமைப்புகளும் ஒருசேர முன்னேறினால்தான் உண்மையான வளர்ச்சி ஏற்படும் என்பது பிரதமரின் நம்பிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாணவ,மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி ‘நம் நாட்டில் இடஒதுக்கீடு இன்னும் தேவையா என அவரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘இந்தியாவில் ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கு இடஒதுக்கீடு முறை இன்னும் தேவையாக இருக்கிறது. அதேநேரத்தில் சில அரசியல் கட்சிகள் மக்களை சாதி, மதம், இனம் ரீதியாக பிரிக்க பார்க்கின்றனர். நாம் அனைவரும் வேறுபாடுகளை மறந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டியது அவசியம் ’’என்று குறிப்பிட்டார். தொடர்ந்து ஏழைகளுக்கு மத்திய அரசின் இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்களையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் அண்ணாதுரை, கல்லூரியின் இணைச் செயலாளர் ஹேமந்த் சோடியா, கல்லூரி முதல்வர் வெங்கட்ரமணன், டீன் ரம்யா மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.