10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ‘ரோஜ்கர் மேளா’ என்கிற வேலைவாய்ப்பு முகாமை பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் இந்த முகாமானது, கடந்த 8 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்த அரசு எடுத்த முயற்சியின் முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது. இந்த முகாமில் 75,000 பேருக்கு மத்திய அரசு சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. 10-வது இடத்தில் இருந்து கடந்த 8 ஆண்டுகளில் 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம். மிகப்பெரிய பொருளாதார நாடுகள் கூட பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மையால் திணறி வருகின்றன.
ஆனால், நாம் நமது பொருளாதாரத்தில் தடைகளை ஏற்படுத்திய பிரச்னைகளை குறைத்திருக்கிறோம். கடந்த 100 ஆண்டுகளாக உள்ள பெரிய பிரச்னையின் பக்க விளைவுகளை 100 நாளில் தீர்த்து விட முடியாது. இருந்த போதிலும், இந்தியா முழு பலத்துடன் புதிய முயற்சிகள் மற்றும் சில அபாயங்களுடன் உலகளாவிய நெருக்கடியில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. உங்களின் ஒத்துழைப்பால்தான் இதுவரை நாட்டை காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. சுயசார்பு இந்தியா என்ற பாதையை நோக்கி நடை போடுகிறோம். உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தத்தளிக்கும் நிலையில், அதனை இந்தியா சமாளித்து வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.
இளைஞர்கள் சொந்த தொழில் செய்ய பயிற்சி மற்றும் கடன் அளிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இறக்குமதியை நம்பியிருந்த காலம் மாறி, இந்தியா தற்போது ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பணியாணை பெற்றவர்கள் நாட்டு மக்களுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டும். வேளாண்மை, சிறு குறு நடுத்தர தொழில் துறை வலிமை அதிகரிப்பதை நோக்கி இந்தியா பயணிக்கிறது” என்றார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி சொன்னதை செய்வார். 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார். நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கும் 75,000 இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.