தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக, ‘நான் முதல்வன்’ போட்டித்தேர்வுகள் பிரிவு சிறப்பு திட்ட இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது :-
கடந்த 2022-23-ம் ஆண்டு தமிழக பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையானவசதிகளைச் செய்து உதவும் வகையில் ஒருதிட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் 1,000 சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலை தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2024-ம் ஆண்டின் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக ரூ.25,000 நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2024) யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ‘https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration’ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.