அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் !

அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் !

Share it if you like it

நேற்று (19-11-2023) ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தமிழ்நாட்டில் 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்தியது. அந்த அணிவகுப்புகளில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர். குழந்தைகள் முதல் பெரியோர் வரை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர். இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது :-

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’ எனும் மகாகவி பாரதியின் வாக்கிற்கு ஏற்ப, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) உறுப்பினர்கள் தேசப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்கு ஆலயம் அமைந்திட வேண்டும் என்பது, நம் நாட்டு மக்களின் நீண்ட கால ஆவல். இக்கனவு நிறைவேறும் வகையில், ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் அமைந்து வரும் பிரமாண்டமான ஆலயத்தில், 2024 ஜனவரி 22 அன்று குழந்தை ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளார். 500 ஆண்டு காலப் போராட்டத்தில், ஸ்ரீராமர் கோவிலைக் காக்க 77 முறை போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 3.50 லட்சம் பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். ஸ்ரீராமர் கோவில் என்பது வெறும் கட்டிடம் அல்ல. இது ஸ்ரீராமரின் கடமை, தர்மம், பாசம், இரக்கத்தின் அடையாளமாக விளங்குகிறது.

சோஷலிஷ்ட் தலைவர் ராம் மனோகர் லோஹியா இதேபோன்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். ”ராமர் தெற்கில் இருந்து வடக்கையும், கிருஷ்ணர் மேற்கில் இருந்து கிழக்கையும் ஒரு தேசமாக இணைக்கிறார்கள். சிவன் பார்வதியின் உடலை சுமந்து கொண்டு நாடு முழுவதும் பயணித்தார், அப்போது 51 சக்தி பீடங்கள் உருவாகின. இவை நாட்டை ஒன்றிணைக்கின்றன” என்றார். அதே போன்று தான், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் 98 வருடங்களாக செயலாற்றி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். தொடங்கியதில் இருந்தே, நல்ல மனிதர்களை உருவாக்குவது எனும் லட்சியத்துடன், டாக்டர் ஹெட்கேவார் காட்டிய வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தினசரி ஷாகா (கிளை), வாராந்திர மிலன் (கூடுதல்) ஆகியவை பாரத தேசத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் நடைபெற்று வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் பல்வேறு துறைகளில் பங்காற்றி, தேசத்தை உயர்த்தி வருகிறார்கள். நமது உலகனைத்தும் ஒரு குடும்பம் எனும் ‘வசுதைவ குடும்பகம்’ சிந்தனையை, இன்று உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ். 1939-ல் ஆரம்பிக்கப்பட்டது. குமரியில் விவேகானந்த கேந்திரா நிர்மாணம், மீனாட்சிபுரம் மதமாற்றம் தடுப்பு, வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பிரதிஷ்டை, கிருஷ்ணகிரியில் ஜாதி பிரச்னைக்கு தீர்வு, 2015-ல் சென்னை வெள்ளத்தின் போது நிவாரண சேவை என்று ஏராளமான பணிகளை தமிழகத்தில் செய்துள்ளது.

“சுவாமி விவேகானந்தர் கண்ட கனவை நனவாக்க, பல லட்சம் இளைஞர்கள் சங்கத்தில் பயிற்சி பெற்று, பல துறைகளில் வேலை செய்து வருகிறார்கள். இந்த தேசத்தில் உள்ள பிரச்னைகளுக்கான தீர்வுகளை நாட்டு இளைஞர்கள் கண்டுபிடித்தார்கள் என்ற நிலை வரவே சங்கம் விரும்புகிறது” என்று ஆர்.எஸ்.எஸ். அகில பாரதத் தலைவர் திரு. மோகன் பாகவத் சமீபத்தில் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளார்கள். அவர்களில் முக்கியமானவர் வள்ளலார். அவரது 201வது ஆண்டினைக் கொண்டாடி வருகிறோம். பிரிட்டிஷாரால் நாட்டில் ஏற்பட்ட வறுமையால் விளைந்த பட்டினிக் கொடுமையைப் போக்க அன்னசாலை திறந்தவர் அவர். சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையவும் அவர் அரும்பாடுபட்டார். முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் படையெடுப்பதற்கு முன்னர் நம் நாடு எந்தவொரு புகழோங்கிய நிலையில் இருந்ததோ, அதே போன்ற உன்னதமான நிலையை, உலகிற்கே வழிகாட்டக் கூடியவளாக பாரத அன்னை வீற்றிருக்கும் காட்சியை நாம் காண வேண்டும். அதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன.

குறிப்பாக கீழ்க்காணும் 5 விஷயங்களில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்:

  1. சாமாஜிக் சமரஸதா – சமுதாய நல்லிணக்கம்:
    நமது சாஸ்திரத்தில் எங்குமே தீண்டாமை குறிப்பிடப்படவில்லை. இது இடைக்காலத்தில் ஏற்பட்ட தவறு தான். இதைப் போக்க ஜாதிகளுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவருடன் பேசி, பழகுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும்.
  2. குடும்ப ப்ரபோதன் – உன்னதமான குடும்பம்:
    இன்று இளைஞர்கள் மற்றும் பெற்றோருக்கு இடையே தலைமுறை இடைவெளி உள்ளது. அடுத்த தலைமுறையினர் மத்தியில் நமது பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை போதிக்க வேண்டும். பெற்றோரை மதித்தல், குலதெய்வ வழிபாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்
  3. பர்யாவரன் ரக்ஷக் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு:
    புவி வெப்பமயமாதலைத் தடுக்க சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். மரம் நடுதல், நீர்நிலை பராமரிப்பு இவற்றில் அனைவருமே கவனம் செலுத்த வேண்டும்.
  4. சுதேசி விழிப்புணர்வு:
    நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களையே வாங்க வேண்டும் என்பது குறித்த புரிதலை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் அவரவரின் தாய்மொழியை அவசியம் கற்க வேண்டும்.
  5. சமூகப் பொறுப்புணர்வு:
    சமுதாயப் பொறுப்புணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும். பொது இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது உள்பட, அரசியலமைப்புச் சட்டம் கூறும் அடிப்படைக் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும். இதுதொடர்பாக அனைவர் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Share it if you like it