தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாது என்று காவல்துறை அச்சப்படுகிறதா என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் சீருடை அணிவகுப்பை நடத்துகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு செப்டம்பர் 28-ம் தேதிக்குள் அனுமதி வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அணிவகுப்புக்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், போலீஸார் மீண்டும் அனுமதி மறுத்து விட்டனர். எனவே, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
இந்த நிலையில், இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியா முழுவதும் நடைபெறும் ஒரு பாரம்பரியம் மிக்க ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன? தமிழகத்தில் மாற்றுக் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்ல உரிமை இல்லையா? உங்கள் கொள்கைக்கு ஒத்துவராதவர்களை ஒதுக்குவதற்கு உங்களது ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவீர்களா? சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும், ஊர்வலங்களை நடத்துவதற்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தில் சம உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும், பொதுக்கூட்டத்தையும் ஊர்வலத்தையும் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தலாமே தவிர, அனுமதி மறுப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. ஆகவே, உயர் நீதிமன்ற உத்தரவை அவமதித்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கண்டனத்துக்குரியது. தவிர, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு காவல்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்திருப்பதால், அந்த அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதோடு, தொடர் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக, தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளித்தால் அசம்பாவித சம்பவங்கள் நிகழவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறியிருக்கிறது.
காவல்துறையின் இக்கடிதம் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. அக்கடிதம் உண்மையெனில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வன்முறையை நிகழ்த்தும் அளவுக்கு தமிழகத்தில் இன்னும் பலமாக இருக்கிறார்களா? அப்படியெனில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பதை காவல்துறை ஒத்துக் கொள்கிறதா? அல்லது சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா? காவல்துறையின் கட்டுப்பாட்டில் மாநிலம் இல்லை என்று அரசு உணர்கிறதா? பி.எஃப்.ஐ.தான் காரணம் என்றால், தமிழகத்தை விட பலமாக இருக்கும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்படவில்லையே?
இந்தியா முழுவதும் ஒழுங்குடனும், அமைதியுடனும், கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நிகழாண்டு மட்டும் எப்படி சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் என்று காவல்துறை நினைப்பது ஏன்? தங்களால் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாது என்று காவல்துறையும் தமிழக அரசும் அச்சப்படுகிறதா? நமது மாநிலத்துக்கு அருகிலுள்ள பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் ஊர்வலம் நடத்த அனுமதி இருக்கிறது. ஆகவே, தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த முறையான அனுமதி வழங்க காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.