தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் (பதசஞ்சலன்) நடத்த, உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா, சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நேற்று நடந்தது. மூத்த வழக்கறிஞர்கள் திரு.ஏ.என். ராஜா, திரு.ராஜகோபால்,திரு. கார்த்திகேயன் உட்பட 79 வழக்கறிஞர்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டனர். வழக்கறிஞர் திரு. ராஜேஷ் விவேகானந்தன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில மக்கள் தொடர்பு இணைச் செயலாளர் திரு.இராமராஜசேகர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் திரு.ரவிக்குமார் அவர்கள் வழக்கறிஞர்களை பாராட்டி தொடக்க உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து வழக்கறிஞர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு புத்தகங்கள் கொடுத்து ஆர்.எஸ்.எஸ். அதிகாரிகளால் கௌரவிக்கப்பட்டனர்.அதன்பின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடிய அனுபவங்களையும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடிய அனுபவங்களையும், காவல்துறையையும் அரசு அதிகாரிகளையும் எதிர்கொண்ட விஷயங்களையும், அனைத்து அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டனர். அதற்கு முன்னதாக செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. அதில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு.ரபு மனோகர் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது :-
“ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது துவங்கப்பட்ட வருடமான 1925 முதல், ஒவ்வொரு வருடமும் விஜயதசமி திருநாளன்று அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடந்த, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலங்களில் வன்முறைகள் நடந்ததாக, எந்த வரலாறும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி, அணிவகுப்பை தடுக்க, அனைத்து அடக்குமுறைகளையும் தி.மு.க. அரசு கையாண்டது.
தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போது, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி தான் அனுமதி பெற வேண்டியுள்ளது. இந்த ஆண்டு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும், காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, நவம்பர் மாதம் 19 ஆம் தேதி, தமிழகத்தில், 53 இடங்களில் வெற்றிகரமாக அணிவகுப்பு நடந்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பைத் தடுக்க, அனைத்து அடக்குமுறைகளையும் காவல் துறை கையாண்டது. அணிவகுப்புக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் வீடுகளுக்கு, நள்ளிரவில் 10 க்கும் மேற்பட்ட காவலர்களுடன் சென்று, அச்சத்தை ஏற்படுத்தினர்.
உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்து கட்டுப்பாடுகள், வழிமுறைகளையும் பின்பற்றினோம். ஆனாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்தனர். நீதிமன்றம் அனுமதி அளித்தும், இசைக் கருவிகளை வாசிக்கக் கூடாது என, காவல் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். சற்றும் பொருத்தம் இல்லாத காரணங்களைக் கூறி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மட்டுமல்லாது, சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் மீதும், வழக்குப் பதிவு செய்தனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது எந்தவித அடக்குமுறைகளுக்கும் அஞ்சக்கூடிய இயக்கம் அல்ல. அரசு தரும் நெருக்கடிகளை, பயிற்சியாக எடுத்துக் கொண்டு இன்னும் வேகத்துடன் பணியாற்றும்”. இவ்வாறு வழக்கறிஞர் திரு.ரபு மனோகர் அவர்கள் கூறினார். ஆர்.எஸ்.எஸ்., மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.