சவாலான சூழ்நிலையிலும் இந்திய மக்களுக்கு சேவை செய்வதே எங்களது வெளியுறவுக் கொள்கை. அந்த வகையில், இந்திய மக்களின் நலனுக்காக ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதன் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியா மட்டும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இதனால், இந்தியா மீது உக்ரைன் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. இதுகுறித்து பேசிய அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயில் உக்ரைனின் ரத்தம் இருக்கிறது. இந்தியாவுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயிலும், உக்ரைனிய ரத்தத்தின் பெரும் பகுதி இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அளித்த டிமிட்ரோ, ரஷ்ய எண்ணெயை இந்தியா மலிவு விலையில் வாங்குவதற்கு உக்ரைனியர்களால் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ரஷ்ய போரால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் எங்கள் மக்கள் இறக்கின்றனர். எங்கள் துன்பத்திலிருந்து நீங்கள் பயனடைகிறீர்கள் என்று கடுமையாகக் கூறியிருந்தார். இந்த சூழலில், தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய வெளியுறவுக் கொள்கையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மாநிலங்களையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பேசினார். அப்போது, ஜி20 மாநாட்டிற்கு இந்திய தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறது. இது இந்தியாவால் நடத்தப்படும் மிக உயர்ந்த சர்வதேச கூட்டமாகும். ஆகவே, 200 கூட்டங்களை இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடத்த ஏற்பாடு செய்வதே எங்களின் முற்சியாக இருக்கிறது.
பொதுவாக, வெளியுறவுக் கொள்கை என்பது அமைச்சகத்தின் செயல்பாடு அல்லது அரசின் சாதாரண செயல்பாடு அல்ல. இது அனைத்து இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே, சவாலான சூழ்நிலையிலும்கூட இந்திய மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் முயற்சி. குறிப்பாக, இந்திய மக்களுக்கு சேவை செய்வதே எங்களது வெளியுறவு கொள்கை. ஆகவே, இந்திய மக்களின் நலனுக்காக சிறந்த ஒப்பந்தம் கிடைக்கும் இடத்திற்கு செல்வதுதான் விவேகமான கொள்கை. அதன்படிதான், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அதேபோல, இந்திய எல்லைப் பகுதியில் ஆக்கிரமிக்க நினைக்கும் சீனாவிடம் தூதரக ரீதியில் தெளிவாகக் கூறிவிட்டோம். இதையும் மீறி அவர்கள் தொடர்ந்து எல்லைப் பகுதியில் படைகளை குவித்தால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லை என்று அர்த்தம்” என்று கூறினார். இதன் மூலம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை விமர்சித்த உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் ஜெய்சங்கர்.