இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறந்த தேசபக்தர். எதிர்காலம் இந்தியாவுக்குச் சொந்தமானது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மோடியையும், இந்தியாவையும் புகழ்ந்து பேசியிருக்கிறார். இது உலக அரங்கில் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கிறது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள வால்டாய் டிஸ்கஷன் கிளப்பில் வருடாந்திர சர்வதேச வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின், “பிரிட்டன் அரசின் காலனி நாடாக இருந்த இந்தியா, தற்போது மாபெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. 150 கோடி மக்கள் ஒன்றிணைந்து இந்த வளர்ச்சியை நிஜமாக்கி இருக்கிறார்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தேசபக்தர். அவரது ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. மோடி தலைமையில் இந்தியா பல்வேறு முன்னேற்றங்களைச் சந்தித்திருக்கிறது. ஆகவே, எதிர்காலம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குச் சொந்தமானது.
மேலும், உலகளாவிய கொள்கைகளில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. மற்ற நாடுகள் இந்திய நாட்டின் மீதான எந்தவொரு தடையையோ அல்லது கட்டுப்படுத்துதலையோ விதிக்க முயன்றாலும், தனது தேசத்தின் நலனுக்காகச் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை மேற்கொள்ளும் திறன்கொண்டவர் மோடி. இந்தியாவும், ரஷ்யாவும் பல தசாப்தங்களாக நெருங்கிய நட்புறவால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையே ஒருபோதும் கடினமான சூழல் வந்ததில்லை. வரும் காலத்திலும் இதேநிலை தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இந்திய விவசாயத்துக்குத் தேவையான உரங்களின் விநியோகத்தை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி, நாங்கள் உர உற்பத்தி அளவை 7.6 மடங்கு அதிகரித்திருக்கிறோம். இதனால், விவசாய வர்த்தகம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்திருக்கிறது” என்றார். புதினின் இப்பேச்சு உலக அரங்கில் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கிறது.