எஸ் எஸ் விஸ்வநாததாஸ் தனது நாடகங்கள் மூலமாக சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியவர் (1886- 1940)
தமிழ் நாடகக் கலையின் மூலம் சுதந்திர வேட்கையை மக்களுக்கு ஏற்படுத்துவதில் ஈடுபட்ட கலைஞர்களுள் முதன்மையானவர் என்கிற பெருமை விஸ்வநாத தாஸ் அவர்களையே சாரும்.
1886 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி செல்வாக்கான மருத்துவர் குடும்பத்தில் பிறந்த விஸ்வநாததாஸ் நாடகக்கலையின் தந்தை என அறியப்பட்ட சுவாமி சங்கரதாஸ் அவர்களிடம் நாடகக்கலையை பயில்வதற்காக அவரது குருகுலத்தில் போய் சேர்ந்தார்.தனது எட்டாவது வயதிலேயே அவர் தனது முதல் அரங்கேற்றத்தை மேடையில் நிகழ்த்தினார்.வெகுவிரைவிலேயே தனது நாடகத் திறமையால் நாடகக் குழுவில் மிகவும் பெயர்பெற்றவராக விளங்கினார். பெண்கள் வேடமேற்று நடிப்பதிலும் சிறப்பு நாடகங்களிலே “ராஜபார்ட்” என்று சொல்லப்படக்கூடிய முக்கிய வேடங்களில் நடிப்பதிலும் அவர் தேர்ச்சி பெற்று விளங்கினார்.
மகாத்மா காந்தி உடனான சந்திப்பு சாதாரண நாடக கலைஞரான விஸ்வநாததாஸ் சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது. 1911 ஆம் ஆண்டில் தூத்துக்குடிக்கு விஜயம் செய்த மகாத்மா காந்தியினுடைய பிரார்த்தனை கூட்டத்தில் விஸ்வநாததாஸ் அவர்கள் பாடுவதற்கு அழைக்கப்பட்டார்.பிரார்த்தனை கூட்டத்தில் மேடை ஏறி பாடிய விஸ்வநாததாஸின் குரல் வளத்தை காந்தியடிகள் மிகவும் பாராட்டினார். இவ்விதமாக காந்தியடிகளை மிகவும் நெருக்கத்தில் பார்க்கும் வாய்ப்பை பெற்ற விஸ்வநாததாஸ் அவருடைய கொள்கைகளால் கவரப்பட்டார். அது முதற்கொண்டு அவர் கதர் ஆடையை விரும்பி அணிய தொடங்கினார். சாதாரண நேரத்தில் கதர் ஆடை அணிவது மட்டுமின்றி அவர் நாடகத்திலே தோன்றும் பொழுதும் நாடகம் மேடையிலும் கதர் ஆடையோடு காட்சியளிக்க ஆரம்பித்தார். அவர் ஏற்கும் பாத்திரத்திற்கு பொருத்தமாக கதர் ஆடையினால் செய்யப்பட்ட ஆடை அணிகலன்களை அணிந்த முருகனாக, கோவலனாக,மயான காண்டத்தில் அரிச்சந்திரனாக தோன்றினாலும் அவர் கதர் ஆடை உடுத்தி தனது தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.
இது மட்டுமின்றி தேசபக்தி ததும்பும் பாடல்களையும் தனது நாடகங்களில் பாடத் தொடங்கினார்.இதனைக் கண்ட மற்றைய நாடகக் குழுக்களும் தேசபக்தி பாடல்களை தங்கள் நாடகங்களின் சேர்த்து பாடத்தொடங்கினார்கள்.அவருடைய குருநாதரான சுவாமி சங்கரதாஸ் நாடக மன்றம் என்ற பெயர் கொண்ட விஸ்வநாத தாஸினுடைய சொந்த நாடகக் குழுவானது சொந்த நாட்டில் மட்டுமின்றி சிங்கப்பூர், பர்மா, மலேசியா,ஸ்ரீலங்கா போன்ற இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து சுதந்திரப் போராட்ட உணர்வினை தனது நாடகங்களின் மூலமாகவும் பாடல்களின் மூலமாகவும் வெளிப்படுத்தினர்.
வெறும் நாடக நடிப்போடு மட்டும் நின்றுவிடாமல் விடுதலைப் போராட்ட உணர்வை தூண்டி விடுவதால் இவர் விரைவிலேயே ஆங்கில போலீசின் கண்காணிப்புக்கு உள்ளானார். விஸ்வநாததாஸ் எங்கெல்லாம் நாடகம் போடுகிறாரோ அங்கெல்லாம் ஆங்கிலேய போலீஸ் அதிகாரிகள் தயாராக இருப்பது வழக்கமாயிற்று. நாடகம் முடிந்தவுடன் அவரை கைது செய்வதும் வழக்கமாயிற்று. அவர் காந்திஜியை 1911 இல் சந்தித்தது முதலாக தனது வாழ்நாளில் 29 வருடங்களில் 29 முறை சிறை சென்றிருக்கிறார் விடுதலையாகி வெளியே வந்த பிறகும் மீண்டும் அதே நாடகத்தை போடுவார் ; அதே வசனங்களை பேசுவார் .தடையை மீறியும் பல நேரங்களில் இவர் நாடகங்களை நடத்தினார். இதில் வேடிக்கை என்னவென்றால் அன்றைய நாடகங்கள் அநேகமாக புராண நாடகங்கள் தான் அதில் இவர் முருகனாகவோ சிவனாகவோ நடித்துக் கொண்டிருப்பார். இவரை மேடையிலேயே வைத்து கைது செய்து கொண்டு போவார்கள். அப்போது விஸ்வநாததாஸ் ஆக இல்லாமல் முருகனாகவோ சிவனாகவோ தான் சிறைக்கு செல்வார்.ஒருமுறை இவருடைய தீவிர கருத்திற்காக ஆங்கிலேய அரசாங்கம் இவர் மீது தேச துரோக குற்றம் சாட்டியது .அப்போது இவருக்காக வாதாடியவர் கப்பலோட்டிய தமிழன் என்று புகழ்பெற்ற வ உ சிதம்பரனார் ஆவார்.
மற்றொரு முறை இவர் நாடகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது ஆங்கில காவல்துறை இவரை கைது செய்வதற்கு திட்டமிட்டது. போலீஸ்காரர்கள் இவரை தேட ஆரம்பித்தனர். நாடகத்திற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் எந்த நேரத்திலும் விஸ்வநாததாஸ் கைது செய்யப்படலாம் என்கிற சூழ்நிலை ஏற்பட்டது. ஒத்துக்கொண்டபடி நாடகத்தை நடத்தியே தீர வேண்டும் என்கிற காரணத்தால் அப்பொழுது திருநெல்வேலியில் இருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வீட்டிற்கு விஸ்வநாததாஸ் சென்றார். இவர் வருவதை முற்றிலும் எதிர்பார்க்காத தேவர் பெருமானார் அவரை மரியாதையோடு வரவேற்று அவரிடம் ஆசி பெற்றார்.தன்னுடைய நிலைமையை எடுத்து கூறிய விஸ்வநாததாஸ் அன்றைய தினம் திருநெல்வேலியில் நாடகம் நடத்துவதற்கு தேவர் பெருமகனாரின் உதவி தேவை என்று கேட்ட பொழுது உடனடியாக தன்னுடைய தொண்டர் படையோடு நாடகக் கொட்டகை வரை வந்து அவருக்கு பாதுகாப்பு கொடுத்தார்.நாடகம் தொடங்குவதற்கு முன்பாக ஆங்கிலேய காவல் அதிகாரிகளும் நாடக அரங்கில் நுழைந்தனர்.முதல் வரிசையிலே முத்துராமலிங்க தேவர் அவர்களை பார்த்ததும் மேலும் தேவர் அவர்களுடைய தொண்டர் படையை பார்த்ததும் ஆங்கிலேய காவல்துறை பின்வாங்கியது.அன்றைய தினம் எந்த வித இடையூறும் இல்லாமல் விஸ்வநாததாஸ் அவர்கள் வெற்றிகரமாக நாடகத்தை முடித்துக் கொடுத்துவிட்டு மறுநாள் தானாகவே முன்வந்து போலீசாரிடம் சரணடைந்தார்.அதை தொடர்ந்து அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.ஒரு சில வருடங்களுக்குப் பிறகு அவர் சிலையிலிருந்து விடுதலையான பின்பும் இவருடைய நாடகத்தின் மூலமாக விடுதலை உணர்வை ஊட்டும் பணியானது தொய்வில்லாமல் நடைபெற்றது.
சுதந்திரப் போராட்டத்தின் போது பல்வேறு அமைப்புகள், தனிமனிதர்கள், கூட்டணிகள்,தொண்டர் படைகள், மன்னர்கள்,ஜமீன்தார்கள் என பல்வேறு தரப்பட்டவர்களும் களம் கண்டிருந்த நிலையில் திருமங்கலம் நகரில் 1938 ஆம் ஆண்டு செயல்பட்டு வந்த ஸ்ரீ சுபாஷ் பாபு வாலிபர் சங்கம் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து வீரமுடன் போராடி வந்துள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் அவர்கள் தைரியமுடன் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த சங்கத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் நேரடி உறுப்பினர்களாகவும் ஆயிரக்கணக்கானோர் மறைமுக தொண்டர்களாகவும் இணைந்துள்ளனர்.
நாடகப் பணிக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்ட தியாகி விஸ்வநாததாஸ் விடுதலைப் போராட்ட வேள்வியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இவருடைய வாழ்வின் இறுதியும் இவர் மிகவும் விரும்பிய நாடக மேடையிலேயே நிகழ்ந்துவிட்டது. 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் சென்னையில் உள்ள சால்ட் கோட்டர்ஸ் என்னும் இடத்தில் விஸ்வநாததாஸ் அவர்களுடைய நாடகம் நடைபெற்றது. அதுவே அவருக்கு இறுதி நாடகமாக அமைந்துவிட்டது.வள்ளி திருமணம் என்ற நாடகத்தில் மேடையிலே மயில் மீது ஏறிய முருகனாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மேடையிலேயே அவர் உயிர் பிரிந்தது.நாடகக் கலை மூலமாகவும் தேசபக்தி உணர்வை ஏற்படுத்த முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருந்த மாபெரும் கலைஞர் மறைந்துவிட்டார் . இந்த மாபெரும் நாடக கலைஞரை கௌரவப்படுத்தும் விதமாக தமிழக அரசு மதுரையில் திருமங்கலத்தில் உள்ள அவரது வீட்டை நினைவுச் சின்னமாக மாற்றியுள்ளது. அன்னாரது கலையையும் தேசபக்தியையும் நாமும் போற்றுவோமாக.
செல்வி.அனுகிரஹா