2024-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
தட்சிண கன்னடா மாவட்டம் மூட்பித்ரியில் ராணி அப்பாக்காவின் நினைவு அஞ்சல் தலை வெளியிட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஸ்ரீக்ஷேத்ரா தர்மஸ்தலா தர்மாதிகாரி (பரம்பரை நிர்வாகி) வீரேந்திர ஹெக்கடே மற்றும் தலைமை தபால் ஜெனரல் (கர்நாடக வட்டம்) எஸ்.ராஜேந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
விழாவில் அஞ்சல் தலையை வெளியிட்டுப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கையே பிரதமர் மோடி எப்போதும் நம்புவதால் மகளிர் மசோதா உண்மையாகி விட்டது. ஆசாதி கா அம்ரித் மஹோத் சவ்வின் ஒரு பகுதியாக 14,500 கதைகள் கொண்ட டிஜிட்டல் மாவட்ட களஞ்சியத்தை அரசு தொகுத்திருக்கிறது. இது சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களைச் சிறப்பித்துக் காட்டுகிறது.
சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு, அரசியலமைப்புச் சபையில் பெண்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் பழங்குடியினத் தலைவர்கள் ஆகிய 3 புத்தகங்களை வெளியிட அமர் சித்ர கதாவுடன் மத்திய கலாசார அமைச்சகம் இணைந்திருக்கிறது.
கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் ராணி அப்பாக்காவின் பெயரில் சைனிக் பள்ளி திறக்கப்படும்” என்றார். மேலும், நினைவு தபால் தலைக்குப் பயன்படுத்தப்பட்ட ராணி அப்பாக்காவின் உருவப்படத்தை வரைந்ததற்காக கலைஞர் வாசுதேவ் காமத்தையும் நிதியமைச்சர் வாழ்த்தினார்.