30 லட்சம் கடனுக்கு 50 லட்சம் வட்டி கட்டியும் தனது வீட்டை தி.மு.க. பிரமுகர் அபகரித்துக் கொண்டதால், கலெக்டர் அலுவலகம் முன்பு தாயும், மகனும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் மீட்டர் வட்டி, கந்துவட்டி, ஸ்பீடு வட்டி என விதவிதமாக வட்டி வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, தி.மு.க. ஆட்சியில் கந்துவட்டிக் கொடுமை தலைவிரித்தாடியது. இந்த வட்டிக்கொடுமையால் ஏராளமான அப்பாவி கூலித் தொழிலாளர்களும், வியாபாரிகளும் தற்கொலை செய்து கொண்ட அவலம் அரங்கேறியது. இதையடுத்து, 2001-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு ஜெயலலிதா, கந்துவட்டிக்கு தடை விதித்தார். இதன் பிறகு கந்துவட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி ஆகியவற்றுக்கு கடிவாளம் போடப்பட்டது. எனினும், தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கந்துவட்டிக் கொடுமையும் தலைதூக்கும்.
அந்த வகையில், 2021-ம் ஆண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதன் பிறகு, வழக்கம்போல கந்துவட்டி கொடுமையும் தலைதூக்கி இருக்கிறது. சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பூபதியிடம், நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த சவுந்தரராஜன் 50,000 ரூபாய் கடன் வாங்கி 80,000 ரூபாய் திருப்பிக் கொடுத்தார். ஆனால், மேலும் 10,000 ரூபாய் கேட்டு கடந்த ஜூன் 14-ம் தேதி சவுந்தரராஜனை தாக்கினார் பூபதி. இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதேபோல, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ராயப்பன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் கதிரவனிடம் 50,000 ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அசலும், வட்டியும் கொடுக்கச் சென்றபோது, 3 லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார் கதிரவன். மேலும், பணத்தை கொடுக்க முடியாவிட்டால் பூர்வீக சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி மிரட்டி இருக்கிறார். இதனால் விரக்தியடைந்த ராயப்பன் குடும்பத்துடன் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
இந்த நிலையில்தான், சேலம் மாவட்டத்தில் மற்றொரு கந்துவட்டிக் கொடுமையில் தாயும், மகனும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது மகன் தனசேகர். இவர் தி.மு.க. பிரமுகரான மாதேஷ் என்பவரிடம் 30 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். அசலும் வட்டியுமாக 50 லட்சம் ரூபாய் கட்டியும், மேலும் 10 லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார் மாதேஷ். தனசேகரால் பணத்தை கொடுக்க முடியாததால், அவரது வீட்டை தி.மு.க. பிரமுகர் மாதேஷ் அபகரித்துக் கொண்டாராம்.
இதனால் விரக்தியடைந்த தனசேகரும், அவரது தாயார் பழனியம்மாளும் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க முயன்றனர். இதைக் கண்டதும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், இருவரையும் தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.