சேலத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபரை தி.மு.க. பிரமுகர் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது திருமலைகிரி கிராமம். இங்குள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடந்து மண்டலபூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் சென்றிருக்கிறார். இதை தட்டிக்கேட்ட சிலரிடம், அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதையறிந்த சேலம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாணிக்கம், அந்த இளைஞரையும், அவரது பெற்றோரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மாணிக்கம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சூழலில், அதே திருமலைகிரி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூக வாலிபரை, தி.மு.க. பிரமுகர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருமலைகிரி வள்ளுவர் நகர் பகுதியைச் சோந்தவர் அசோகன். பெயின்ட்டரான இவர், கடந்த 13-ம் தேதி இரவு தனது வீட்டில்தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் குமார் என்பவர், மதுபோதையில் வந்திருக்கிறார். பின்னர், தனது செல்போனை காணவில்லை என்றும், அதை அசோகன்தான் எடுத்ததாகவும் கூறி, அவரை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார். அதற்கு அசோகன் தான் எடுக்கவில்லை என்று எவ்வளவு மன்றாடியும், குமார் கேட்கவில்லை.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அசோகனை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்த அசோகன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, இதுகுறித்து இரும்பாலை போலீஸில் புகார் செய்தார். ஆனால், போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில், தி.மு.க. பிரமுகர் குமார், அசோகனை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க.வின் அராஜகத்தை கண்டித்து வருகின்றனர்.