கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்து, சாக்லேட் கொடுப்பதுபோல கொடுத்துவிட்டு, கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டியிடம் செயினை பறித்துவிட்டு, பெண் ஒருவர் எஸ்கேப்பான சம்பவம், சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இம்மாதம் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக, டிசம்பர் மாதம் தொடங்கி விட்டாலே, கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க கிறிஸ்தவ மக்கள் தயாராகி விடுவார்கள். இதன் ஒரு பகுதியாக சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வீதிகளில் வலம் வரும் நபர்கள், கண்ணில் படுபவர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துத் தெரிவித்து, சாக்லேட் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் ஆண்கள்தான் இதுபோன்று சாண்டா கிளாஸ் வேடமணிவது வழக்கும். இந்த சூழலில், பெண் ஒருவர் சாண்டா கிளாஸ் வேடமணிந்து வந்து மூதாட்டியிடம் சாக்லேட் கொடுத்துவிட்டு, கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி, செயினை பறித்துச் சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சேலம் அஸ்தம்பட்டி அருகேயுள்ள டி.வி.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராணி. 65 மூதாட்டியான இவர், தனியாக வசித்து வருகிறார். இந்த சூழலில், சாண்டா கிளாஸ் என்கிற கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்த ஒரு பெண், பொன்ராணி வீட்டின் கதவை தட்டி இருக்கிறார். வெளியே வந்த பொன்ராணிக்கு அந்த பெண் சாக்லேட் கொடுத்திருக்கிறார். அதை அவர் வாங்கியபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் பாக்கெட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து பொன்ராணியின் முகத்தில் வீசி இருக்கிறார் அந்த பெண். அந்த அதிர்ச்சியிலிருந்து பொன்ராணி மீள்வதற்குள், அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு அந்தப் பெண் தப்பி ஒடிவிட்டார்.
பின்னர், பொன்ராணி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். எனினும், அதற்குள் அப்பெண் தப்பிச் சென்று விட்டார். பிறகு, அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதேசமயம், பொன்ராணி வீட்டில் தனியாக வசிக்கும் விவரத்தை நன்கு அறிந்த நபர்கள்தான் இக்காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்து வந்த பெண் ஒருவர், மூதாட்டியின் செயின் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இனி யார் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்தாலும் சந்தேகப் பார்வை பார்க்க வேண்டி இருக்குமே!