பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் 2024 போட்டிகள் நேற்றுடன் வண்ணமயமான கலை நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றன. கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய இந்த ஒலிம்பிக் விழாவில் 26 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். 32 விளையாட்டுப் போட்டிகளில் சுமார் 329 பிரிவுகளுக்கான போட்டி நடைபெற்ற முடிந்தது. இதில் இந்தியாவிலிருந்து 117 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று ஆறு பதக்கங்களை கைப்பற்றினர். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 71 வது இடத்தை நிறைவு செய்துள்ளது.
பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலத்துடன் 126 பதக்கங்களுடன் முதலிடத்தில் நிறைவு செய்தது. சீனா 40 தங்கம், 27 வெள்ளி 24 வெண்கலம் என 91 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 45 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தை நிறைவு செய்தது. நிறைவு விழாவில் ஒவ்வொரு நாடும் தங்களது கொடிகளை ஏந்தி வீரர்கள் ரசிகர்களிடம் பிரியாவிடை பெற்றனர். இந்தியா சார்பாக நிறைவு விழாவில் இரண்டு வெண்கல பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடும் வீராங்கனை மனு பாக்கரும், வெண்கல பதக்கம் வென்ற ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பி ஆர் ஸ்ரீஜேசும் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிறைவு விழாவில் போட்டியை நடந்து முடிக்க உதவிய சுமார் 40 ஆயிரம் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் முடிவடையும் போது, விளையாட்டுகளின் மூலம் ஒட்டுமொத்த இந்தியக் குழுவின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்களின் சிறந்த திறனை வெளிப்படுத்தியுள்ளனர், ஒவ்வொரு இந்தியரும் அவர்களைப் நினைத்து பெருமிதம் கொள்கிறார்கள். நமது விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் நம் இந்திய வீரர் வீராங்கனைகள் தங்களுடைய முழு உழைப்பையும் போட்டியில் செலுத்தி பதக்கங்களை பெற்று நமது நாட்டை பெருமை படுத்தி வருகின்றனர். நமது நாடும் பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருவதால் எதிர்காலத்தில் நடத்தவிருக்கும் ஒலிம்பிக் போட்டியினை இந்தியாவில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.