தமிழகம்- கர்நாடக எல்லையை ஒட்டி காவிரி ஆறு உள்ளது. இதில் அடிபாலாறு, காரைக்காடு, செட்டிப்பட்டி, கோட்டையூர், காவிரிபுரம், கருங்கல்லூர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் மணல் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடந்து வருவதாக குற்றச்சாட்டும், புகார்களும் எழுந்துள்ளது. இதனிடையே, மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான செட்டிப்பட்டி காவிரி ஆற்றில் மணல் கடத்துவதாக மேட்டூர் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை அமைத்து மணல் கடத்தும் நபர்களைப் பிடிக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில், தனிப்படை போலீஸார் செட்டிப்பட்டி, காரைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காவிரி ஆற்றில் இருந்து 2 டிராக்டர்கள் மூலம் மணலை ஏற்றிக்கொண்டு காரைக்காடு வழியாக சிலர் வந்து கொண்டிருந்தனர். அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீஸாரை பார்த்து, டிராக்டர் டிரைவர்கள் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
இதனையடுத்து 2 டிராக்டர்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார், கொளத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே, வாகன சோதனையின் போது, ஒரு டிராக்டர் வண்டியில் இருந்த மணலை சாலையில் கொட்டிவிட்டு, வாகனத்தை எடுத்து கொண்டு ஓடி விட்டனர். இந்த மணல் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டது, செட்டிப்பட்டி தி.மு.க கிளை செயலாளர் பழனிசாமி மற்றும் சடையன் (எ) வேலுமணி ஆகியோரின் டிராக்டர்கள் என்பது தெரியவந்தது.
மேலும், டிராக்டரை எடுத்து கொண்டு சென்ற நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து கொளத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தி.மு.க கிளை செயலாளர் பழனிசாமியை கைது செய்தனர். இதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.