2023-ம் ஆண்டில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பேன் என்று அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் அமைச்சுப் பணியாளராக பணிபுரிந்தவர் சங்கர். இவர், தனது நண்பர்களுடன் இணைந்து சவுக்கு என்கிற இணையதளத்தை தொடங்கி நடத்தி வந்ததால், சவுக்கு சங்கர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது, தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க விமர்சகராக வலம் வருகிறார் சவுக்கு சங்கர். தி.மு.க. துணைப்பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழியின் ஆதரவாளராக அறியப்படுகிறார். ஆகவே, தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உட்பட மூத்த தலைவர்கள் பலரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல, பா.ஜ.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல, அ.தி.மு.க.வையும் விமர்சிக்கத் தவறியதில்லை.
மேலும், நீதிபதிகளையும் விமர்சிக்கத் தொடங்கினார். இதனால், ஆத்திரமடைந்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், தாமாக முன்வந்து சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 100 நாட்கள் சிறையில் இருந்த சவுக்கு சங்கர், தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இவரது சிறை தண்டனைக்கு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசும் முக்கியக் காரணமாக இருந்தது என்றால் மிகையாகாது. எனவே, தி.மு.க. மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்து சவுக்கு சங்கர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததுமே, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில்தான், தி.மு.க.வுக்கு நான் மிகப்பெரிய தலைவலியாக இருப்பேன் என்று சபதம் செய்திருக்கிறார் சவுக்கு சங்கர். இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், “இந்தாண்டு தி.மு.க.வுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பேன். தமிழ்நாடே நமக்குச் சொந்தம் என்று நினைத்துக் கொண்டு ஒரு குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இதை கைகாட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதைத் தட்டிக்கேட்க ஒருத்தன் கூடவா இருக்கமாட்டான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்க அப்பாவுட்டு நாடா இது. உங்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறதா?’’ என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இந்தக் காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.