பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று. இங்கிலாந்தில், வருடாவருடம் சராசரியாக 47,000 பெண்கள் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். சுமார் 3 லட்சம் பெண்களுக்கு இந்நோய் வருவதற்கான மிதமான மற்றும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பல வருடங்களாக பெண்களின் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த அனஸ்ட்ரசோல் (anastrozole) எனும் மருந்தை தற்போது நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்த இங்கிலாந்தின் மருந்து மற்றும் உடலாரோக்கிய பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (Medicines And Healthcare Products Regulatory Agency) உரிமம் வழங்கியுள்ளது.
தினமும் 1 மில்லிகிராம் (1 mg) அனஸ்ட்ரசோல் மாத்திரையை 5 வருடங்கள் எடுத்து கொண்ட பெண்களில் 50 சதவீதம் பேருக்கு நோய் தாக்குதல் ஏற்படவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அனஸ்ட்ரசோல் மார்பக புற்றுநோய் வருவதை தடுப்பதில் அதிக திறன் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.