இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு ஆங்கிலேயர்களால் அதிகாரப் பரிமாற்றத்தைக் குறிக்கும் வகையில் வழங்கப்பட்டு அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் வரலாற்றுச் செங்கோலான ‘செங்கோலை” பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவி ஒரு வருடம் ஆகிறது. இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை மீட்டெடுத்து நிறுவியதன் முதலாம் ஆண்டு நிறைவை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. நமது சுதந்திரத்துக்கு வழிவகுத்த அதிகாரப் பரிமாற்றத்தின் வெளிப்படையான கருவியாக விளங்கிய செங்கோலின் புண்ணிய பூமியும் அதன் பிறப்பிடமான தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கும் இது சிறப்புப் பெருமைக்குரிய நாள். தமிழர் பெருமையின் இந்த அடையாளத்தை வேண்டுமென்றே நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்வதிலிருந்து மீட்டு, அதை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். இவ்வாறு எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இத்தனை சிறப்பு வாய்ந்த செங்கோலை திமுக நிர்வாகிகள் அவமானப்படுத்தியதையும் மறக்க முடியாது. பாராளுமன்ற திறப்பு விழாவின் முக்கிய நிகழ்வாக தமிழ்நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் வழங்கிய செங்கோலை பிரதமர் மோடி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் சபாநாயகர் இருக்கைக்கு அருகிலேயே வைத்து, செங்கோல் முன் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலானது. இந்த நிலையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு விமர்சித்து இருந்தார். அதில், “மூச்சு இருக்கா? மானம் ?? ரோஷம் ???” என்று குறிப்பிட்டு அந்த படத்தை அமைச்சர் பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.