சேலம் மாவட்டம், வெள்ளாளப்பட்டி திமுக ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருபவர் சியாமளா தேவி. இவரின் கணவர், ராமச்சந்திரன். இவர் கடந்த வாரம் வெள்ளாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புகுந்து தலைமையாசிரியரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் சித்ராவிடம் பேசியபோது, “எங்கள் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கான வகுப்பறைகள் சி.எஸ்.ஆர் நிதியில் கட்டப்பட்டு வருகின்றன.
இதனை தாரமங்கலத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் டெண்டர் எடுத்துச் செய்து வருகிறார். இவரும் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ராமச்சந்திரனும் ஆரம்பத்திலிருந்து நல்ல நண்பர்கள். அவர் மூலம்தான் நடராஜன் பள்ளிக் கட்டடம் கட்டும் வேலையை எடுத்துச் செய்துவந்தார்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஊராட்சித் தலைவரின் கணவர் ராமச்சந்திரன், தன்னுடன் 10 ஆட்களை அழைத்துக்கொண்டுவந்து, நடராஜனை வேலையை நிறுத்தச் சொல்லியும், அவர் சரியாக கட்டடம் கட்டவில்லை என்றும் என்னிடம் கூறி வருகிறார். நான் வேலையை எப்படி நிறுத்தச் சொல்லமுடியும்… கடந்த 2 தினங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலரே நேரில் வந்து கட்டடத்தைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில், அவர்களுக்குள் இருக்கும் பிரச்னையை மாணவர்களுக்காகக் கட்டப்படும் கட்டடத்தில் காட்டுவது சரியா… இதனை சொல்லப்போனால் `என்னை மீறி இந்தக் கட்டடத்தை யார் கட்ட வருவார்கள்?’ என்று மிரட்டலாக சவால்விட்டுச் செல்கிறார் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்” என்றார்.