போதைப் பொருள் புழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் நடவடிக்கை எடுத்தாலும் போதைப் பொருள் புழக்கம் தமிழக்தில் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் ஈரோட்டில், பல்வேறு கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஈரோடு நகரில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் போலீசார் சோதனை செய்தபோது, உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பகதூர் என்பவர் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அவரை கைது செய்து, ஐந்து கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 1 லட்சம் மதிப்புள்ளதாக கூறப்படுகிறது.
போதை பொருட்களை தற்போது குழந்தைகள் ஆர்வத்தோடு கடைகளில் சென்று வாங்கி சாப்பிடும் பொருட்களில் கூட கலந்து விற்பனை செய்ய தொடங்கி விட்டனர். இன்னும் என்னென்ன பொருட்களில் கலக்க போகிறார்களோ என்கிற அச்சம் மக்களை தொற்றி கொண்டுள்ளது. இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும்.