இந்திய தேர்தல் வரலாற்றில் தோல்வியையே சந்திக்காதவர் பிரதமர் மோடி. 21 ஆண்டுகளாக வெற்றியை மட்டுமே சுவைத்து வருபவர் மோடி என்று மூத்த பத்திரிகையாளர் மணி புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
தற்போது உலகளாவிய தலைவர்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக பாரத பிரதமர் மோடி இருந்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றின்போது, உலக நாடுகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி வழங்கியதில் பிரதமர் மோடியை உலக நாடுகள் போற்றிப் புகழ்ந்தன. அதேபோல, தற்போது உக்ரைன் – ரஷ்யா போருக்கு இது சரியான தருணம் அல்ல என்று ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி நேரடியாகக் கூறியது, உலகத் தலைவர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. இதையடுத்து, உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பாரதத்துடன் இணக்கமாக இருக்க விரும்புகின்றனர். இதன் காரணமாகவே, பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், பாரத பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி. இதுகுறித்த தனியார் செய்திச் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சி மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் பல்வேறு தவறுகளை செய்து வருகிறது. ஆனால், பா.ஜ.க. மிகவும் நேர்த்தியாக அரசியல் செய்து வருகிறது. இதனால், அக்கட்சி மிகவும் பவர்ஃபுல்லானா கட்சியாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி மிகவும் பவர்ஃபுல்லான தலைவராக உருவெடுத்திருக்கிறார். சுதந்திரத்திற்கு பிறகான கடந்த 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மிகவும் பவர்ஃபுல் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. அதன் பிறகு, தற்போது மோடிதான் பவர்ஃபுல் பிரதமராக இருந்து வருகிறார். பவரின் அடி நுனிவரை சுவைக்கக் கூடியவர் மோடி.
மோடி தனது அரசியல் வரலாற்றில் இதுவரை தோல்வியையே கண்டதில்லை. 2001-ம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக ஆனவர், 2012-ம் ஆண்டுவரை 3 முறை முதல்வராக இருந்து விட்டு, 2014-ம் ஆண்டு முதல் தற்போதுவரை பாரதத்தின் பிரதமராக இருக்கிறார். கடந்த 21 ஆண்டுகளாக அரசியலில் வீழ்த்த முடியாத தலைவராக மோடி இருந்து வருகிறார். வெற்றியைத் தவிர வேறு எதையும் பார்த்திராதவர் மோடி. இந்தளவுக்கு ஒரு கட்சிக்கு வெற்றியைத் தேடித்தந்தவர்கள் யாரும் கிடையாது. தனது கட்சிக்கு திரும்ப திரும்ப வெற்றியை பரிசாகக் கொடுத்த மோடி, தனது ஆளுமையை மிகப்பெரிய அளவில் வளர்த்துக் கொண்டிருக்கிறார்” என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார் பத்திரிகையாளர் மணி.
மணியைப் பொறுத்தவரை, மூத்த பத்திரிகையாளராக இருந்தாலும், இடது சாரி சிந்தனை கொண்டவர். பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் தீவிரமாக இருப்பவர்களில் மணியும் ஒருவர். இதன் காரணமாக, தான் கொடுக்கும் பேட்டிகள் அனைத்திலுமே பா.ஜ.க. வளர்ந்து விடக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யக்கூடியவர். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் தி.மு.க.வினருக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் டிப்ஸும் கொடுப்பார். அப்படிப்பட்டவர் பாரத பிரதமரை மிகவும் புகழ்ந்து பேசியிருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.