போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.
தி.மு.க.வின் மூத்த தலைவராகவும், சாராயத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், கடந்த 2011-15 -ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அந்த துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்து இருந்தனர்.
அந்த வகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது கூட்டாளிகளான பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். இதையடுத்து, சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், தன் மீதான மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கு, நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார். தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக செந்தில் பாலாஜி உள்ளார். அவர் மீதான, இந்த குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது அமலாக்கத்துறை வாதிடப்பட்டது.
அதேபோல, புகார் தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏழ்மையான மக்கள் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர். எனவே, இந்த வழக்கை மீண்டும் புதிதாக விசாரணை செய்ய வேண்டும். இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இந்த நிலையில், செந்தில்பாலாஜி மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது. இச்சம்பவம், ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.