ஒரு ஆளுநராக எப்படி செயல்பட வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதிலடி கொடுத்திருக்கிறார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, செந்தில்பாலாஜியிடமிருந்த துறைகளை தங்கம் தென்னரசுவுக்கும், முத்துச்சாமிக்கும் பிரித்துக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின், இலாக இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வார் என்று கூறி, கவர்னருக்கு ஆவணங்களை அனுப்பினார். ஆனால், இலாகாவை பிரித்து வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த கவர்னர், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதுதொடர்பாக கவர்னர் தரப்புக்கும், முதல்வர் தரப்புக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த நிலையில்தான், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக நேற்று இரவு உத்தரவிட்ட கவர்னர், அதற்கான காரணங்களை விளக்கி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார். அக்கடிதத்தில், “செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்ககோரி மே மாதம் 31-ம் தேதி கடிதம் எழுதினேன். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரிகள் செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டை கூறிய பின்பும் பதவியில் தொடர்கிறார். உச்சநீதிமன்ற கருத்துக்களின் அடிப்படையில், நான் எழுதிய கடிதத்தை உரிய முறையில் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக ஜனநாயகத்திற்கு எதிராக நான் செயல்பட்டதாக நீங்கள் எழுதிய கடிதம் ஏமாற்றமளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், “அரசியலமைப்பின் 154, 163, 164-ம் பிரிவை பயன்படுத்தி செந்தில்பாலாஜியை நீக்குகிறேன். அவர் அமைச்சராக தொடர்ந்ததால் விசாரணை அமைப்புகளை சரியாக பணி செய்ய விடவில்லை. அதோடு, ஆளுநர் எப்படி செயல்பட வேண்டும் என்ற வழக்கமான நடைமுறைகள் எனக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் செந்தில்பாலாஜியை அமைச்சராக தொடர வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாடு பாரபட்சமானது” என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், திடீரென நேற்று நள்ளிரவு தனது உத்தரவை நிறுத்தி வைப்பதாக மற்றொரு கடிதத்தையும் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதி இருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. அக்கடிதத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.