கிராமப்புற பின்தங்கிய பகுதிகளில் பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு படித்து ஐ.டி. நிறுவனங்களில் வேலை தேடும் இளைஞர்களுக்கு சேவாபாரதி தமிழ்நாடு முறையான பயிற்சி அளித்து வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது. இதுதொடர்பாக சேவாபாரதி தமிழ்நாடு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சேவாபாரதி தமிழ்நாடு, கிராமப்புற, புறநகர், பின்தங்கிய பகுதிகளில் பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு படித்து ஐ.டி. நிறுவனங்களில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ”சிற்பி” என்ற பெயரில் தொழில் முறைத்திறன், ஆங்கிலச் சொல்லகராதி, தகவல் தொடர்புத்திறன் ஆகிய பயிற்சிகள் அளித்து, அவர்களுக்கு ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கும் முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்து தருகிறது. இதன் மூலம், கடந்த ஆண்டு 100க்கும் அதிகமான நபர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த ஆண்டிற்கான பயிற்சிகளுக்கான துவக்க நிகழ்ச்சி, 07/04/2024 ஞாயிறு அன்று சென்னை பள்ளிக்கரணையிலுள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருமதி. நளினி பத்மநாபன், B.Com, FCA. DISA (ICAI), CISA (USA), பட்டயக் கணக்காளர், இயக்குநர், கனரா வங்கி, மங்களூர் SEZ லிமிடெட் மற்றும் திரு. சுப்ரமணியன், மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குநர், யுபி (YUBI, Formerly Cred Avenue) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில், பேராசிரியர். திருமதி. M. மாலா, M.A., M.Phil., Ph.D., தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர், தாகூர் கல்வி அறக்கட்டளை, திரு. G. மணிகண்டன், செயலாளர், தாகூர் கல்வி அறக்கட்டளை மற்றும் திரு. ரமேஷ் செங்குட்டுவன், B.E., M.Tech., Ph.D., முதல்வர், ஜெருசலேம் பொறியியல் கல்லூரி ஆகியோரும் பங்கு பெற்றனர்.
திரு. ப்ரஷோப குமார், மாநில அமைப்பாளர், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் மற்றும் திரு. B. ரபு மனோகர், மாநிலத் தலைவர், சேவாபாரதி தமிழ்நாடு ஆகியோரின் சிறப்புரை இடம்பெற்றது. வழக்கமாக, வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து பின்னர் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், இவ்வாண்டு அப்பயிற்சியுடன் புதியதாக முதலில் பயிற்சியும் பின்னர் வேலை வாய்ப்பும் என மாற்றி அமைக்கப்பட்ட பயிற்சியும் உண்டென்பது குறிப்பிடத்தக்கது.