புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், நடமாடும் காய்கறி கடை, தந்தையை இழந்த குழந்தைக்கு கல்வி நிதி உதவி வழங்குதல் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
பயனாளிகளுக்கு, திருவாவடுதுறை ஆதீனத்தின் 24 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், பேசிய ஆதீனம், “எந்த ஒரு மனிதனும் பழிபாவங்களுக்கு அஞ்ச வேண்டும். அப்போதுதான் குற்றங்களே நடக்காது.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவல் மனதிற்கு மிகுந்த வேதனை தருகிறது. இது போன்ற கொடிய குற்றத்தை மிருகங்கள் கூட செய்யாது. எனவே, கொடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான், குற்றங்கள் குறையும். குற்றங்கள் குறைந்தால்தான் இறை சிந்தனை பரவும் என்றார்.