கூடுவாஞ்சேரி, நந்திவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாகத் தினமும் பல மணி நேரம் பகல் இரவு பாராமல் மின்வெட்டு ஏற்படுவதால் மின் வாரியத்தின் மீது விரக்தியடைந்த பொதுமக்கள் சுமார் 200 பேர் நள்ளிரவு கூடுவாஞ்சேரியில் ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, நந்திவரம், கன்னிவாக்கம், சாந்தாதேவி நகர், தர்காஸ், பெருமாட்டுநல்லூர் உட்பட்ட பல்வேறு நகர்ப் பகுதிகளில் நேற்று இரவு 10:30 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. வெகு நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் 12:30 மணிக்கு ஆண்கள், பெண்கள் எனச் சுமார் 200 பேர் கூடுவாஞ்சேரி மின் வாரியம் முன்பு ஜி.எஸ்.டி. சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீஸார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூடுவாஞ்சேரி மின் வாரிய அலுவலகம் உள்ளே அனுமதித்து பின்னர் போலீஸார், மின் வாரியத்தினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சுமார் 04.00 மணிக்கு மின்சாரம் வந்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியது: கூடுவாஞ்சேரி, நந்திவரம், கன்னிவாக்கம், சாந்தாதேவி நகர், தர்காஸ், பெருமாட்டுநல்லூர் உட்பட்ட பல்வேறு நகர் பகுதிகளில் நேற்று இரவு 10:30 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. விடியற்காலை 4 மணிக்கு பிறகு மின் விநியோகம் வேண்டும் வந்தது. ஆனால், குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீட்டில் இருந்து எந்த ஒரு மின் சாதனங்களும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தினம் தோறும் இப்பகுதியில் இரவு ஒன்பது மணிக்கு மின்வெட்டு ஏற்படுகிறது. இதே போல் ஒவ்வொரு நாளும் 5 மணி நேரம் 6 மணி நேரம் மின்வெட்டை ஏற்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பகல் நேரத்தில் தினந்தோறும் பத்துக்கு மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுகிறது. இயற்கை மீது மின் வாரியம் குற்றம்சாட்டுகிறது. இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினந்தோறும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட பிரச்சனை காரணமாக கொசுக்கடி காரணத்தினால் முதியவர்கள், குழந்தைகள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் நோயாளிகளும் தூக்கமின்றி அவதிப்படுகின்றன. இதனால் ஒரு சிலர் முதியோர்களுக்கு உடல்நிலை பிரச்சினையும் ஏற்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின் வாரிய அதிகாரிகள் கூறியது: நேற்று பொத்தேரி மறைமலை நகரில் இருந்து வரும் மின் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை மற்றும் காட்டாங்கொளத்தூரில் ஏரியில் மின்கம்பி துண்டானதால் மின் விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இரவு என்பதால் சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் மின் வெட்டு, குறைந்த மின்னழுத்த பிரச்சினையை போக்க காரசங்கால், நெல்லிக்குப்பம், ஊனைமாஞ்சேரி போன்ற இடங்களில் புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் பணிகள் நிறைவடையும் அதன்பின் மின் வெட்டு பிரச்சனை வராது என்றனர்.