தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் இல்ல காப்பகத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான பெண் குழந்தைகள் பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்வாதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காப்பக விடுதியில் தங்கி பயின்று வரும் 10 வயது சிறுவனுக்கு, அப்பெண் இரவில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுவன் வேறொரு தனியார் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு, சிறுவன் மனரீதியாக பாதிப்படைந்தது மிகவும் சோர்வாகக் காணப்பட்டதாக தெரிகிறது.
பின்னர், மாற்றப்பட்ட காப்பக விடுதி பராமரிப்பாளர்கள் சிறுவனது சோர்வு குறித்த காரணத்தை விசாரித்ததாகவும், அப்போது, தான் முதலில் தங்கி இருந்த விடுதியின் பராமரிப்பாளராக இருந்த பெண், தனக்கு பாலியல் சீண்டல் அளித்ததாகவும் கூறியுள்ளார் அதனைத் தொடர்ந்து, விடுதி நிர்வாகத்தினர் தேனி குழந்தைகள் நல அலுவலர் விஜயலட்சுமியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து போடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் பெண்ணை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.