சென்னையில் வசித்து வரும் தம்பதியினரின் மூன்று வயது பெண் குழந்தைக்கு பாலியல் சீண்டல் அளித்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஐடி ஊழியரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் வீட்டின் மேல் தளத்தில், வினோத் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே குடியிருப்பில் தங்கியிருந்த குடும்பத்தினரோடு இவர் நட்பாக பழகி வந்ததாக தெரியவருகிறது.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, வினோத்குமார் மற்றொரு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு மாறி சென்றுள்ளார். இதனிடையே, கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில், தங்களது குழந்தையை வினோத்குமார் வீட்டில் சென்று அடிக்கடி விட்டு செல்வது வழக்கம்.
இதையடுத்து, கடந்த 31ஆம் தேதி குழந்தையை வினோத்குமார் வீட்டில் விட்டு சென்றுள்ளார். மறுநாள் குழந்தை தனது பாட்டியிடம் வினோத் மாமா தன்னிடம் தவறாக விளையாடுவதாக கூறி இருக்கிறார். இதனையறிந்த குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர், வினோத்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இது குறித்து வினோத்குமார் மீது பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வினோத்குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.