மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காலியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மேற்கு வங்க போலீசார் மற்றும் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது.
இதனைத்தொடந்து அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த சென்ற போது அதிகாரிகள் தாக்கப்ப்பட்டனர். இதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஷாஜகான் ஷேக் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஷாஜகான் ஷேக்கின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சந்தேஷ்காலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, விவசாய நிலம் உள்ளிட்ட ரூ.12.78 கோடி மதிப்புள்ள 14 அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி (attach)வைத்துள்ளது.