இந்த காலகட்டத்தில் நாம் நினைத்துப் பார்க்க கூட முடியாத ஒரு அரசியல் ஆளுமை.
தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் அரசியலில் காமராஜரை தெரிந்த அளவிற்கு திரு. கக்கன் அவர்களை நிறைய பேருக்கு தெரியுமா என்றால் அது கேள்வி குறிதான்.
அவரது வரலாற்றை படிக்க படிக்க இப்பேற்பட்ட ஒரு அவதார புருஷனைப் பற்றி நமது பாட புத்தகங்களில் படித்ததே இல்லையே என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
சமூக நீதி காவலர்கள் நாங்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் பல அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்துள்ள நமக்கு இவர் வரலாற்றை படிக்கும் போது இவர் தான் உண்மையான சமூக நீதி கடவுள் என்று தோன்றுவது இயல்பே.
1909ம் வருடம் மதுரை ஜூன் மாதம் 19ஃந் தேதி, மதுரை மாவடாடம், மேலூரில் இருக்கும் தும்பைப் பட்டி கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சார்ந்த பூசாரி கக்கன் குப்பி தம்பதியருக்கு அவர்களுக்கு மகனாக பிறந்தார்.
தந்தையாரின் ஊக்கத்தின் பேரில் பல இடர்பாடுகளை தாண்டி தொடக்கக் கல்வியை முடித்தார் அதற்குப் பின் திருமங்கலம் பி.கே.என். நாடார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தவருக்கு மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாத நிலையில்தான், மதுரையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் தலைவருமான வைத்தியநாத ஐயரின் அறிமுகம் கிடைத்தது.
பள்ளி நாட்களிலேயே பட்டியல் இன மக்களின் மேம்பாட்டுக்காக உழைக்கத் தொடங்கியிருந்த கக்கனை வைத்தியநாத ஐயர் தன்னுடைய வளர்ப்பு மகனாகவே வைத்துக்கொண்டார்.
அவரது வழிகாட்டுதலின் பேரில் மதுரையிலிருந்த அரிஜன சேவா சங்கத்தின் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கு கல்வி மட்டுமே சரியான வழி என்பதை உணர்ந்து அந்த சமுதாய மாணவர்களுக்காக இரவுப் பள்ளிகளை தொடங்கி கல்வி கற்பித்தல் மற்றும். அதற்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவது என்று தனது சேவைகளை தொடர்ந்தார் மதுரையின் சுற்று வட்டாரத்தில் உள்ள ஒடுக்கப்பட்டோர்
கிராமங்களில் இரவு பள்ளிகளை துவங்க உதவினார்.
1932 ல் மதுரையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த சொர்ணம் பாரதி என்பவரை சீர்திருத்த முறையில் திருமணம் செய்து கொண்டார்.
1934 தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் பகுதியாக மதுரைக்கு சுற்றுப்பயணம் வந்த மகாத்மா காந்தி அவர்களை சந்தித்த கக்கன் அவர்கள் காந்தியத்தில் மிகுந்த நாட்டம் கொண்டு சேவா சங்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார்.
காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அவர் தேர்ந்தெடுத்த ஒரே தலைவர் கக்கன்தான் என்பது சிறப்பு.
1938 ஆம் ஆண்டு ஜூலை 8 அன்று காலையில் ஹரிஜன சேவா சங்கத் தலைவர் வைத்தியநாத ஐயர் அந்த சங்கத்தின் செயலர் கோபால சுவாமி ஆகியோருடன் ஆலம்பட்டி சுவாமி முருகானந்தம் கக்கன் சேவாலய ஊழியர் முத்து ,மதிச்சயம் சின்னையா, விராட்டிபத்து பூவலிங்கம் ஆகிய ஐந்து பட்டியல் இனத்தவரும் விருதுநகர் கவுன்சிலர் சண்முகானந்த நாடாரும் மீனாட்சியம்மன் கோவில் நுழைந்து வரலாற்றில் இடம் பிடித்தனர்.
1939ல் வைத்தியநாத ஐயரின் தூண்டுதலால் காங்கிரஸில் இணைந்தவர், தொடர்ச்சியாக சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆந்திர மாநிலத்தில் உள்ள அலிப்பூர் சிறையில் 18 மாதங்கள் கடும் சிறை தண்டனையை அனுபவித்தார். அவரது அயராத உழைப்பை பார்த்து காங்கிரஸ் கட்சியில் பொறுப்புக்கள் தானே அவரை தேடி வந்தன. இந்தியாவின் விடுதலை உறுதிப் படுத்தப் பட்ட போது அரசியல் அமைப்பு சட்ட சபையின் உறுப்பினராக அவருக்கு பதவி கிடைத்தது.
இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப் பட்டவுடன் நடந்த முதல் தேர்தலில் மதுரை தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1955ல் வைத்தியநாத ஐயர் இறந்த போது, அவரை தனது தந்தையாகவே வரித்திருந்த கக்கன்ஜீ, அவரது மகன்களைப் போலவே தனது முடியையும் மழித்துக் கொண்டார் என்று கேள்விப் படுகிறோம்.
வைத்தியநாத அய்யரின் மறைவிற்குப் பிறகு காமராஜரை தனது தலைவராக ஏற்றுக்கொண்டு அரசியலைத் தொடர்ந்தார்.
காமராஜர் முதல்வராகும் போது தனது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை துறக்க வேண்டி இருந்ததால் அந்தப் பொறுப்பை கக்கன் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் 1957ல் சட்டமன்றத் தேர்தலின் போது மேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மதராஸ் மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சரானார். அப்போதுதான் மேட்டூர் அணை வைகை அணை இரண்டும் அவரது முயற்சியால் கட்டப்பட்டது.
தொடர்ந்து,1962 இல் சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று வேளாண்மை துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றார்.
அவர் வேளாண்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரால் இரண்டு விவசாய பல்கலைக் கழகங்கள் நிறுவப் பட்டன.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஸ்தாபன காங்கிரஸ் ஆகவும் இந்திரா காங்கிரஸ் ஆகவும் பிரிந்த போது கக்கன் ஸ்தாபன காங்கிரஸிலேயே தொடர்ந்தார்.
நேர்மை, எளிமை இரண்டுக்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர் திரு.கக்கன். அவர் அமைச்சராக இருந்த போது, அரசு தனக்கு கொடுத்த வீட்டில் அனாவசியமாக யாரையும் தங்க வைக்க மாட்டாராம், அரசு வாகனத்தில் தன் குடும்பத்தினரைக் கூட அழைத்துப் போக மாட்டாராம், யாராவது பரிசுப் பொருட்கள் கொடுத்தால் அதற்கு மாற்றாக உதவி ஏதாவது செய்ய வேண்டியிருக்கும் என்று அவற்றை ஏற்க மாட்டாராம். இது மாதிரி மனிதர்களைப் பார்ப்பது எளிதான விஷயமா?
இந்த எளிமையான அரசியல்வாதியைத்தான் 1967 சட்டமன்றத் தேர்தலில். மக்கள் அவரை தோற்கடித்தனர் அதன் பின்னர் 1971ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றபின் அறவே அரசியலிலிருந்து விலகினார்.
பார்கின்ஸன் வியாதியால். பாதிக்கப்பட்ட அவர் மிகவும் சிரமப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சாதாரண வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆர் அந்த ஆஸ்பத்திரிக்கு வருகை தந்த போது இவர் அங்கு இருக்கிறார் என்று கேள்விப்பட்டு போய் பார்த்தபோது சாதாரண வார்டில் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த ஆஸ்பத்திரி டீனைக் கூப்பிட்டு இவரை விஐபி வார்டுக்கு மாற்றும்படி ஆணையிட்டார் என்பார்கள்.
இப்பேர்ப்பட்ட அற்புதமான ஒரு தலைவர், ஒரு சாதாரண மனிதனைப் போல் தனது இறுதி நாட்களைக் கழித்தவர், 1981ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
பல வருடங்கள் கழித்தாவது அவரது வரலாற்றை நாம் படிக்கிறோம். நம் இளைய தலைமுறைக்கு இதை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையை நாம் செய்வோம்.
– Article by திருமதி. உமா வெங்கட்