சோனியா விஷக் கன்னி… ராகுல் பைத்தியம்… பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதிலடி அட்டாக்!

சோனியா விஷக் கன்னி… ராகுல் பைத்தியம்… பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதிலடி அட்டாக்!

Share it if you like it

பிரதமர் நரேந்திர மோடியை விஷப் பாம்பு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதைத் தொடர்ந்து, சோனியா காந்தி விஷக் கன்னி என்றும், ராகுல் காந்தி பைத்தியம் என்றும் கடுமையாக விமர்சித்திருக்கிறார் கர்நாடகா பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசனகவுடா யத்னால்.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைக்கவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த சூழலில், கடக் மாவட்டம் கலபுர்கியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மோடி ஒரு விஷப் பாம்பைப் போன்றவர். நீங்கள் ஒருவேளை அதில் விஷம் இருக்கிறது அல்லது இல்லை என்றுகூட நினைக்கலாம். ஆனால், நீங்கள் அதைத் தொட்டுப் பார்த்தால் இறந்துவிடுவீர்கள்” என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “கார்கேவின் எண்ணத்தில் விஷம் இருக்கிறது. அரசியல் ரீதியாக போட்டிபோட முடியாத விரக்தியில், அவர்களுக்கு இத்தகைய எண்ணங்கள் வருகின்றன. தங்களின் கப்பல் மூழ்குவதைக் கண்ணெதிரே காண்கின்றனர். மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடிக்கவே, தான் கூறியது யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கோருவதாக கார்கே தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கொப்பலில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசனகவுடா யத்னால், “உலகமே பிரதமர் மோடியை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா நமது பிரதமரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் அவரை நாகப் பாம்புடன் ஒப்பிட்டு விஷமுள்ளவர் என்று கூறுகிறார்கள். சோனியா காந்தியின் உத்தரவின் பேரில் காங்கிரஸ் தலைவர்கள் நடனமாடி இதுபோன்ற கருத்துகளை கூறி வருகின்றனர். சோனியா காந்தி ஒரு விஷக் கன்னி. அவர், சீனா மற்றும் பாகிஸ்தானின் ஏஜென்ட். அதேபோல, நம் ராணுவம் பாகிஸ்தானில் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த ஆதாரங்களை கேட்கும் அவரது மகன் ராகுல் காந்தி ஒரு பைத்தியம்” என்று கூறியிருக்கிறார்.

பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையேயான இந்த வார்த்தைப் போர் மாநிலத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it