இந்திய தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்தும் 4-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (செப்.11) துவங்கி வரும் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூடான், நேபால், வங்கதேசம், மாலத்தீவு என 7 நாடுகளிலிருந்து 28 வகையான விளையாட்டுகளில் 210 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டிகள் அனைத்தும் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்தியாவில் இருந்து 62 வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 9 பேர் பங்கேற்று உள்ளனர். சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு தடகள சங்கம் சர்வதேச தொடரை மீண்டும் நடத்துகிறது. 1995ஆம் ஆண்டு கடைசியாக சர்வதேச தடகள தொடர் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். தொடர்ந்து முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தது. மேலும், தமிழக வீராங்கனை அபிநயா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.72 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.