தமிழக மீனவர்கள் விவகாரத்தை கருணையுடன் அணுக வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் வலியுறுத்தியதாக பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்திருக்கிறார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் பயணமாக இந்தியா வந்தார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, இரு நாடுகள் இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பா, யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனையை இலங்கையில் ஏற்றுக் கொள்வது, இலங்கையில் இந்தியா செயல்படுத்தி வரும் மின்சாரம், எரிசக்தி, வேளாண்மை, கடல்சாா் பணிகள் உள்பட பல்வேறு திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவது தொடா்பாகவும், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, வர்த்தகம் ஆகியவை குறித்தும் பிரதமர் மோடியுடன் ரணில் பேச்சு நடத்தினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், மீனவர்கள் பிரச்னையில் இரு தரப்பும் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். இதையடுத்து பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, இந்தியாவின் வளர்ச்சி அதன் அண்டை நாடுகளுக்கும் நன்மை தரும் என்றும், இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்தியா துணை நின்று உதவியதாகவும் கூறினார்.
இதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ‘கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேயுடனான பேச்சுகளில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் மனிதாபிமான அடிப்படையிலும் கருணையுடனும் அணுகப்பட வேண்டும் என்பதை நாம் இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.