இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது. தலைநகர் கொழும்பில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பு பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ், மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது. இதில் வெல்லப்போவது யார் என்பது நாளை தெரிய வரும் ?
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பொருளாதார நெருக்கடி இன்னும் முற்றிலுமாக தீராத நிலையில், அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. திட்டமிட்டபடி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இலங்கையில், காலை 7 மணிக்குத் துவங்கிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். வாக்குப்பதிவு முடிவடைந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை துவங்கும். சனிக்கிழமை நள்ளிரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரியவரலாம்.