சுற்றுலாத் தலமாக மாறிய இலங்கை அதிபர் மாளிகை!

சுற்றுலாத் தலமாக மாறிய இலங்கை அதிபர் மாளிகை!

Share it if you like it

இலங்கையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கண்டித்து, இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்கள் கைப்பற்றினார்கள். இதைத் தொடர்ந்து, அதிபர் மாளிகை சுற்றுலாத் தலம் போல காட்சியளித்து வருகிறது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதனால் அங்கு மக்கள் போராட்டம் வெடித்தது. ராஜபக்ஷே குடும்பத்தினர் அதிபர் மற்றும் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இது உள்நாட்டுக் கலவரமாக மாறிய நிலையில், பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ஷே மட்டும் விலகினார். அதேசமயம், கோத்தபய ராஜபக்ஷே அதிபர் பதவியில் நீடித்து வந்தார். இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் அமர்த்திய கோத்தபய, விரைவில் பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதாக உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்தனர். ஆனால், மாதங்கள் ஓடினவே தவிர, இலங்கையின் பொருளாதார நெருக்கடி மட்டும் தீர்ந்தபாடில்லை. பால், கேஸ், சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை குறையாததால் வெகுண்டெழுந்த மக்கள், மீண்டும் போராட்டக்களத்தில் குதித்தனர். கடந்த முறை போராட்டத்தின்போது பிரதமர் மகிந்த ராஜபக்ஷே மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் வீட்டை கைப்பற்றி சூறையாடி கொளுத்தியவர்கள், இந்த முறை போராட்டத்தின்போது அதிபர் மாளிகையையே கைப்பற்றினார்கள். எனினும், இத்தகவலை உளவுத்துறை மூலம் முன்கூட்டியே தெரிந்துகொண்ட ராஜபக்ஷே குடும்பத்தினர் கப்பல் மூலம் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டனர்.

இதனிடையே, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு அதிபர் மாளிகையில் நீச்சல் குளத்தில் குளித்தும், மெத்தையிலும் படுத்து உறங்கியும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்தும் பொழுதை கழித்து வருகின்றனர். இதனால், அதிபர் மாளிகையே சுற்றுலாத் தளம் போல காட்சியளித்து வருகிறது. மேலும், அதிபர் மாளிகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய்களையும் போராட்டக்காரர்கள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். ஒருபுறம் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொருபுறம் அதிபர் மாளிகை சுற்றிப் பார்க்க படையெடுத்து வருகிறார்கள் மக்கள். இதுபோன்ற சம்பவங்களால் இலங்கை மீண்டும் போர்க்களமாக காட்சியளித்து வருகிறது.


Share it if you like it