கடுமையான பொருளாதார நெக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான சேவா பாரதி இன்டர்நேஷனல் சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய், மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இலங்கை 2000 ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுவரை விடுதலைப் புலிகள் மற்றும் அரசுக்கும் இடையேயான உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டது. 2009-ல் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு, இலங்கை அந்த பாதிப்பிலிருந்து மீண்டும் எழுந்து வந்தது. எனினும், அங்கு நடந்து வந்த சில வன்முறைகளால் அந்நாடு பெரிய அளவில் மீளமுடியவில்லை. இதனிடையே, 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையிலுள்ள கிறிஸ்தவ சர்ச்சில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவத்தால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்தது. தொடர்ந்து அடுத்த ஆண்டே, அதாவது 2020 மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கியது. இது இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கியது.
இதையடுத்து, இலங்கையின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றது. தற்போது அந்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது. இதன் காரணமாக, அத்தியாவசிப் பொருட்களின் விலை வரலாறு காணாத உச்சத்தில் இருக்கிறது. ஒரு லிட்டர் பால் பாக்கெட்டின் விலை 250 ரூபாய். தவிர, அரிசி 500 ரூபாய், ஆப்பிள் ஒரு பழம் 150 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. அதோடு, சமையல் கேஸ் தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது. இதனால், மக்கள் கொந்தளித்து இலங்கை அரசுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடத் துவங்கி இருக்கிறார்கள். மேலும், ராஜபக்ஷே குடும்பம் அரசியலை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனால், செய்வதறியாது திகைத்து நிற்கிறது இலங்கை அரசு.
இந்த நிலையில்தான், ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளை அமைப்பான ‘சேவா இன்டர்நேஷனல்’ சார்பில் மலையக தமிழர்கள், ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் ஹெச்.எஸ்.எஸ். எனும் ஹிந்து ஸ்வயம் சேவக சங்கம் என்கிற பெயரில் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உலக நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்க ‘அகண்ட தமிழ் உலகம்’ என்ற அமைப்பையும் நடத்தி வருகிறது. இதுகுறித்து அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் இலங்கை ஒருங்கிணைப்பாளர் மகா கணேசன் கூறுகையில், “இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் மலையக பகுதிகள், தலைமன்னார் பகுதிகளில் 1 லட்சம் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை எங்கள் அமைப்பின் தன்னார்வலர்கள் வாயிலாக அடையாளம் கண்டிருக்கிறோம். நுவரெலியா, கண்டி, ரத்னபுரா, பதுல்லா, மட்டாரா, காலே, மன்னார் மாவட்டங்களில் 5,௦௦௦-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொகுப்பை வழங்கினோம். இதற்காக, உலகெங்கும் உள்ள அகண்ட தமிழ் உலகம், சேவா இன்டர்நேஷனல் அமைப்பினர் நிதியுதவி செய்து வருகின்றனர். குறைந்தது 1 லட்சம் குடும்பங்களுக்கு உதவி செய்வது எங்கள் இலக்கு. மருந்துகள், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களையும் வழங்கி வருகிறோம். தமிழர்கள் மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் அனைவருக்கும் உதவி வருகிறோம்” என்றார்.
இதனிடையே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பின் பேரில் இலங்கை சென்றிருக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சேவா இன்டர்நேஷனல் அமைப்பின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உதவிப் பொருட்களை வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.