அரசு கொடுத்த பட்டா இருங்குங்க : ஆனா இடம் இல்லைங்க : பரிதவிக்கும் மக்கள் !

அரசு கொடுத்த பட்டா இருங்குங்க : ஆனா இடம் இல்லைங்க : பரிதவிக்கும் மக்கள் !

Share it if you like it

மாஞ்சோலை என கேட்டதும், எழில் கொஞ்சும் இயற்கையும், தேயிலையின் மனமும்தான் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும். அங்குள்ள தேயிலை தோட்டமும், தொழிலாளர் வர்க்க மக்களின் நிலை குறித்தும் பலருக்கு இத்தனை நாள்கள் தெரியாது. தற்போது அவர்கள் குறித்து பேச காரணமாக உள்ள அறிவிப்பு என்னவென்றால், மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்டத்தை நிர்வகித்து வந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவடைந்ததால், தொழிலாளி மக்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அங்கு வேலை செய்யும் தொழிலாளிகள் அதிர்ச்சியில் உள்ளனர். திடீரென வெளியேற சொன்னால் தேயிலை தோட்டத்தை மட்டுமே நம்பியிருந்த அப்பாவி மக்கள் எங்கு செல்வார்கள்.

தொழிலாளர் குடும்பத்தினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும், வழங்கப்படாதவர்களுக்கு அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதனையே நீதிமன்றமும் வலியுறுத்தியிருந்தது.

இச்சூழலில், மாஞ்சோலையில் உள்ள 60 குடும்பங்களுக்கு தெற்கு பாப்பான்குளம் கிராமத்தில் 2019 ஆண்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சர்வே எண் உள்ளிட்ட விவரங்கள் சாதாரண பாமர மக்களான தொழிலாளர்களுக்கு புரியும் படியாக தெரிவிக்கப்படவில்லை. வீட்டு மனை பட்டாக்கள் குறித்து எந்த கேள்விக்கும் அரசு சார்பில் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இணையதளம் மூலம் சர்வே எண்ணை கண்டறிந்த ஊத்து கிராம வார்டு கவுன்சிலர் ஸ்டாலின், அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது தனியார் தொண்டு நிறுவனம் ஆக்கிரமித்தது தெரியவந்தது.

ஊத்து கவுன்சிலர் ஸ்டாலின் இதுதொடர்பாக பேசுகையில், “பட்டா இரண்டு, மூன்று முறை கொடுத்துள்ளார்கள். எல்லோருக்கும் கொடுக்கவில்லை, சிலருக்கு வழங்கியுள்ளார்கள். பட்டா கொடுத்ததுடன் சரி. ஆனால், அந்த இடத்தைக் காட்டவில்லை. இடத்தைக் காட்டினால்தான் நாங்கள் போய் வீடு கட்ட முடியும். நாங்கள் அடிக்கடி போய் கேட்டபோது காட்டுகிறோம், காட்டுகிறோம் என சொன்னார்கள். ஆனால் மூன்று வருடம் கழித்து உங்களது பட்டா கேன்சல் ஆகிவிட்டது என்கிறார்கள். அதை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்” என்றார்.

அரசின் இலவச பட்டா பெற்றவரான கண்ணன் இதுதொடர்பாக பேசுகையில், “இடத்தை இன்னும் காட்டவில்லை. சில ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தார்கள். இதை யாரிடம் சொல்லி முறையிட வேண்டும் என தெரியவில்லை. அரசாங்கத்தின் உதவி இல்லாமல் யார் செய்வார்கள். பெயருக்கு எங்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு இடத்தை பெரிய பெரிய நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டார்கள்” என தெரிவித்தார்.

ஆக்கிரமிப்புகள் என்பது உண்மை என்று கண்டறியப்பட்டால், அவைகள் அகற்றப்பட்டு மக்கள் வாழ வழி செய்யப்படும் என்று அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.

தேயிலை தோட்டமே வாழ்வு என இருந்த மக்களுக்கு போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த தவறிவிட்டு, அப்பாவி மக்களை குறைக்கூறுவது சரிவராது. புதிதாக மறுவாழ்வு கொடுப்பதற்காக நிலம் கொடுக்கப்பட்டாலும் வீடுகள் வழங்கப்படும் என உறுதி அளித்த போதும் மக்களின் மனநிலை மோசமாகதான் இருக்கிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *